“யானைகளா? சுவரா?” யாரு ஜெயிக்க போறா? – வெளியான பிரபு சாலமனின் காடன் படத்தின் ட்ரைலர்
3 March 2021, 2:04 pmதமிழ் சினிமாவின் ஹீரோ ஹீரோயின் ரொமான்ஸ் காட்சிகள், அவர்களோடு ஒரு காமெடியன், ஒரு குத்துப்பாட்டு, கடைசியில் ஒரு சண்டைக் காட்சி என்று டெம்பிளேட் ஓடிக்கொண்டிருந்தது. அதை தனது படத்தின் மூலம் மாற்றி எழுத முயற்சித்தார் பிரபு சாலமன். அவர் இயக்கிய கும்கி திரைப்படம், இயல்பு மக்களின் வாழ்க்கையை, அதிகம் சொல்லப்படாத மக்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருந்தது. யானை, யானை பாகன் அவர்களின் வாழ்க்கை முறையை கேமரா வழியே நமக்கு அறிமுகப்படுத்தியவர், தற்போது காடன் படத்தின் மூலம் மீண்டும் யானைகள் கதைகள் பேச வந்திருக்கிறார்.
கும்கி படத்தில் யானை மனிதர்களை காப்பாற்ற போராடியது போல் இந்தப்படத்தில், யானைகளை மனிதர்களிடம் இருந்து காப்பாற்ற போராட்டம் நடப்பதாக ட்ரைலர் உணர்த்துகிறது. இந்த படத்தில் ராணா டகுபதி, விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மேலும் இந்த படம் காடுகளை அழித்து கட்டடங்கள் கட்டும் சமாச்சாரத்தையும், அதன் பின்னால் இருக்கும் அரசியலையும் தோல் உரித்து காட்டுவதாக உள்ளது.
மேலும் ஒரு காட்சியில் ஜக்கிவாசுதேவ் போல ஆடை அணிந்து ஒரு கதாபாத்திரம் வருவதால் இந்த படம் எதிர்ப்புகளை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. பிரபு சாலமன் இயக்கிய இந்த படத்தில் விஷ்ணு விஷால், ராணாவை தவிர சோயா உசேன் மற்றும் ஸ்ரேயா பில்கோன்கர் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் ஆஸ்கார் விருது வாங்கிய ரசூல் பூக்குட்டி, இந்த படத்தில் சவுண்ட் டிசைன் செய்திருக்கிறார். காடன் திரைப்படம் மார்ச் 26 ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவித்து இருக்கிறது படக்குழு.
1
0