இனிமே இப்படி பண்ணீங்கனா அவ்வளவுதான்!- ரவி மோகன்-ஆர்த்தி வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…
Author: Prasad23 May 2025, 2:47 pm
அறிக்கை போர்
ரவி மோகன்-ஆர்த்தி ஆகியோர் பிரிவிற்கு பிறகு ரவி மோகன் ஆர்த்தியின் தாயாரான சுஜாதா விஜயகுமார் மீது பல புகார்களை அடுக்கினார். அதாவது, தான் ஒரு தங்கமுட்டை இடும் வாத்தாக இருந்ததாகவும் தன்னை ஆர்த்தியின் தாயார் வீட்டோடு மாப்பிள்ளையாக வைத்துக்கொண்டதாகவும் ரவி மோகன் கூறினார். “என்னுடைய பணம்தான் அவர்களுக்கு தேவைப்பட்டது, நான் தேவைப்படவில்லை” எனவும் கூறினார்.
இதனை தொடர்ந்து ரவி மோகன்-கெனீஷா ஆகியோர் ஜோடியாக ஐசரி கணேஷ் வீட்டுத் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆன நிலையில் ஆர்த்தி, “18 வருடங்களாக காதலுடனும் நம்பிக்கையுடன் கைக்கோர்த்து நடந்த ஒரு மனிதன் என் கைகளை மட்டுமல்ல தன் பொறுப்புகளில் இருந்தும் கைநழுவிச் சென்றிருக்கிறார்” என மனம் நெகிழ்ந்தபடி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த அறிக்கையை தொடர்ந்து இதற்கு பதிலளிப்பது போல் ரவி மோகன், சிறைவாசம் போல இருந்த ஒரு உறவில் இருந்து வெளியே வந்துவிட்டதாக கூறி ஆர்த்தியுடனான தனது சோகமான அனுபவங்களை பகிர்ந்து 4 பக்க அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதனை தொடர்ந்து ரவி மோகனின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் ஆர்த்தியின் தாயாரான சுஜாதா விஜயகுமாரும் ஒரு அறிக்கை வெளியிட அதனை தொடர்ந்து ஆர்த்தியும் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். இவ்வாறு மாறி மாறி அறிக்கை போரை நடத்தி வரும் நிலையில் நீதிமன்ற ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இனி அறிக்கை வெளியிட தடை
அதாவது ரவி மோகன்-ஆர்த்தி வழக்கை விசாரித்து வரும் நீதிமன்றம், “தங்களுக்கிடையேயான பிரச்சனைகள் குறித்து ரவி மோகன்-ஆர்த்தி இருவரும் இனி எந்த அறிக்கையும் வெளியிடக்கூடாது” என உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ரவி மோகன், ஆர்த்தி குறித்து சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியிடக்கூடாது எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது. தன்னை பற்றி அவதூறு கருத்துகளை வெளியிட ஆர்த்திக்கும் அவரது தாயார் சுஜாதா விஜயகுமாருக்கும் தடை விதிக்கவேண்டும் என ரவி மோகன் வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
