ஒரு பிரியாணி கேட்டது குத்தமா?- விஜய்யை நோக்கி படையெடுத்து வந்த கூட்டம்! தரமான சம்பவம்…
Author: Prasad8 May 2025, 8:00 pm
விஜய் என்றால் கூட்டம்…
நடிகர் விஜய் சாதாரணமாக பொதுவெளியில் தென்பட்டாலே கூட்டம் அலைமோதிவிடும். அப்படி இருக்கும்போது அவர் பிரியாணி கேட்டால் சும்மா இருப்பார்களா என்ன? விஜய் பிரியாணிக்கு ஆசைப்பட்டு அவருக்காக பிரியாணி வாங்கச் சென்ற நடிகர் கஞ்சா கருப்பு செய்த ஒரு தரமான சம்பவத்தை குறித்துதான் இப்போது பார்க்கப்போகிறோம்.

வாசம் சுண்டி இழுக்குதே…
விஜய் நடித்த “அழகிய தமிழ் மகன்” திரைப்படத்தில் இடம்பெற்ற “மதுரைக்கு போகாதடி” பாடலின் காட்சிகளை காரைக்குடியில் படமாக்கினார்களாம். படப்பிடிப்பு முடிவடைந்த பின் காரைக்குடியில் ஒரு ஹோட்டலில் விஜய், சந்தானம், கஞ்சா கருப்பு ஆகியோர் மேல்தளத்தில் தங்கியிருந்தனராம்.
அந்த சமயத்தில் கீழ் தளத்தில் இஸ்லாமியர் குடும்பத்தினரின் திருமண நிகழ்வு ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்ததாம். அங்கு சமைக்கப்பட்ட பிரியாணி வாசனை மேல்தளம் வரை பரவியதாம். அப்போது விஜய் பிரியாணி வாசனை அருமையாக இருக்கிறது என கூற, கஞ்சா கருப்பு உடனே அவருக்காக பிரியாணி வாங்கிவர கிளம்பிவிட்டாராம்.
சற்று நேரத்தில் மேல் தளத்தில் திடீரென கூட்டம் அலைமோதியதாம். அப்போது விஜய் சந்தானத்தை அனுப்பி என்ன கூட்டம் என பார்த்து வரச்சொன்னாராம். அங்கே கஞ்சா கருப்பு கூட்டத்துடன் நின்றுகொண்டிருந்தாராம். அவரிடம் சென்று என்ன இங்க கூட்டம் என்று கேட்க, அதற்கு கஞ்சா கருப்பு, “விஜய் அண்ணன் பிரியாணி கேட்டார்னு சொன்னேன். எல்லாரும் எடுத்துக்கிட்டு வந்துருக்காங்க” என கூறினாராம். இந்த சம்பவத்தை சந்தானம் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.