ராம் படம் மாதிரியே இல்ல, நல்லா இருக்கு?- இது பாராட்டா? விமர்சனமா? குழப்பத்தை ஏற்படுத்தும் ரசிகர்கள்!
Author: Prasad5 July 2025, 2:39 pm
ராமின் பறந்து போ…
இயக்குனர் ராம் இயக்கத்தில் சிவா, அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “பறந்து போ”. ஒரு 8 வயது சிறுவனின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட கதையம்சத்தில் உருவான இத்திரைப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இவ்வாறு வெளியாகும் முன்பே அனைவரின் கவனத்தை குவித்த இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் இத்திரைப்படத்தை பார்த்துவிட்டு திரையரங்கில் இருந்து வெளியே வந்த ரசிகர்கள் கூறும் கருத்துகள் என்னவென்று பார்க்கலாம்.

ராம் படம் மாதிரியே இல்ல, நல்லா இருக்கு!
“இத்திரைப்படம் பத்து வயது குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு நன்றாக கனெக்ட் ஆகும். நகரத்தில் மிஷின் வாழ்க்கை போல் ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களின் மத்தியில் ஒரு பரந்து விரிந்த உலகத்தை கொண்ட மனிதர்களின் மனநிலையை கூறுவது போல் இத்திரைப்படம் இருக்கிறது” என ரசிகர் ஒருவர் கூறியுள்ளார்.
“குழந்தைகள் ஆசைப்படும்போது நாம் இருக்கமாட்டோம், நாம் குழந்தைங்களுடன் இருக்கவேண்டும் என ஆசைப்படும்போது குழந்தைகளை கையில் பிடிக்க முடியாது. இதன் மத்தியில் குழந்தைகளை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும், அவர்களுடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்பதுதான் இத்திரைப்படம் சொல்ல வரும் கருத்து. படம் அருமையாக இருக்கிறது” என ஒருவர் பாராட்டியுள்ளார்.
மற்றொருவர், “ராமிடம் இருந்து இப்படி ஒரு படத்தை எதிர்பார்க்கவில்லை. கண்டிப்பாக இன்னும் ஒரு முறை பார்க்கக்கூடிய திரைப்படம்தான். இது ராம் படம் மாதிரியே இல்லை. நன்றாக இருக்கிறது. படத்திற்கு பறந்து போ என்று தலைப்பு வைத்த்தை விட நடந்து போ என்று வைத்திருக்கலாம்” என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.