அமலாக்கத்துறையின் அடுத்த டார்கெட் இந்த நடிகர்கள்தான்? ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றிய முக்கிய ஆவணங்கள்!
Author: Prasad21 May 2025, 5:31 pm
அமலாக்கத்துறை ரெய்டு
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தனது Dawn Pictures என்ற நிறுவனத்தின் மூலம் தனுஷின் “இட்லி கடை”, சிவகார்த்திகேயனின் “பராசக்தி”, சிம்புவின் “STR 49” ஆகிய திரைப்படங்களை தயாரித்து வருகிறார். மேலும் “இதயம் முரளி” என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கியும் வருகிறார். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் டாஸ்மாக் தலைமையிடத்திலும் மதுபான ஆலைகளிலும் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனையில் ஈடுபட்டது. இதில் டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.
இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பல முக்கிய புள்ளிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் வீடும் அடங்கும். இந்த சோதனையில் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆகாஷ் பாஸ்கரனை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆகும்படியும் சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. அவர் எங்கே இருக்கிறார் என்பதும் தெரியவில்லை என கூறப்படுகிறது. இது குறித்த விசாரணையை அமலாக்கத்துறை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த டார்கெட்…
இந்த நிலையில் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனையில் பல முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளனவாம்.
அதாவது “இட்லி கடை” திரைப்படத்திற்காக ஆகாஷ் பாஸ்கரன் தனுஷிற்கு ரொக்கமாக ரூ.40 கோடி அளித்ததற்கான ஆவணங்களை அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளதாம். மேலும் “பராசக்தி” திரைப்படத்திற்காக சிவகார்த்திகேயனுக்கு ரொக்கமாக ரூ.25 கோடி முன்பணமாக கொடுத்ததாகவும் தகவல்கள் கூறுகிறதாம்.

அதே போல் “STR 49” திரைப்படத்திற்காக சிம்புவுக்கு ரொக்கமாக ரூ.15 கோடி முன்பணம் அளித்ததற்கான ஆவணங்களையும் அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளதாம். இவ்வாறு பல கோடி ரூபாய் ரொக்கமாக கைமாறியதற்கான ஆவணங்கள் கிடைத்துள்ள நிலையில் தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகியோரின் வீட்டிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்ப அதிக வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் முக முத்துவின் மகள் வழி பேத்தியான தாரிணியை திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
