திமுகவுக்கு நெருக்கமா? அப்போ அவ்வளவுதான்!- ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் திடீரென புகுந்த அமலாக்கத்துறை!
Author: Prasad16 May 2025, 11:22 am
திடீரென தயாரிப்பாளர்
தமிழ் சினிமாவில் திடீரென பெரிய ஹீரோக்களை வைத்து படம் தயாரிக்கத் தொடங்கியவர் ஆகாஷ் பாஸ்கரன். “பராசக்தி”, “இட்லி கடை”, “STR 49” போன்ற திரைப்படங்களை தயாரித்து வரும் இவர் தற்போது “இதயம் முரளி” என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கியும் வருகிறார்.

இவர் தயாரித்த முதல் திரைப்படமே தனுஷின் “இட்லி கடை” திரைப்படம்தான். இவ்வாறு சினிமாவிற்குள் தயாரிப்பாளராக நுழையும்போதே பெரிய ஹீரோவை வைத்துதான் தயாரிப்பை தொடங்கினார். இதுவே பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த நிலையில்தான் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.
திடீர் சோதனை
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் இன்று அதிகாலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். ஆகாஷ் பாஸ்கரன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மிக நெருங்கிய நண்பர் ஆவார். இவரது திருமண நிகழ்வில் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
திமுகவுடன் ஆகாஷ் பாஸ்கரன் மிக நெருக்கமாக உள்ளார் எனவும் சிலர் கூறுகின்றனர். இந்த நிலையில்தான் இன்று ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.