பிரபல பாடகர் கே.கே. மாரடைப்பால் மரணம்… இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அவர் பாடிய பாடல் இதோ.!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
1 June 2022, 9:29 am
Quick Share

பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் கொல்கத்தாவில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

தமிழ் சினிமாவில் 50க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய கிருஷ்ணகுமார் குன்னத் டெல்லியில் வசித்து வந்த மலையாள குடும்பத்தில் பிறந்தவர் ஆவர். திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பே 3,500க்கும் மேற்பட்ட விளம்பர பாடல்களை பாடியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், காதல் தேசம் திரைப்படத்தில் கல்லூரி சாலை மற்றும் ஹலோ டாக்டர் ஆகிய பாடல்களை பாடும் வாய்ப்பை வழங்கினார். இதுதான், கே.கே.வின் முதல் திரைப்பட பாடலாக கருதப்படுகிறது.

பின்னர், 90s கிட்ஸ்களின் மனம் கவர்ந்த பாடல்களான, காதலிக்கும் ஆசையில்லை (செல்லமே), ஸ்டிராபெர்ரி கண்ணே (மின்சாரக் கனவு), உயிரின் உயிரே (காக்க காக்க), காதல் வளர்த்தேன் (மன்மதன்), ஒரு வார்த்தை சொல்ல ஒருவரும் காத்திருந்தேன் (ஐயா) உள்ளிட்ட காதல் பாடல்களை பாடியுள்ளார்.

அதேபோல, ஒல்லிகுச்சி உடம்புகாரி (ரெட்), வச்சிக்க வச்சிக்க வா இடுப்புல (எம் குமரன் S/O மகாலட்சுமி), அண்டங்காக்க கொண்டக்காரி (அந்நியன்), கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா (சாமி), அண்ணனோட பாட்டு (சந்திரமுகி) அப்படி போடு போடு (கில்லி) உள்ளிட்ட குத்து பாடல்களையும் பாடி ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார்.

கடந்த மூன்று தசாப்தங்களாக இந்திய இசை ஆர்வலர்களுக்கு பல வெற்றிகளை வழங்கிய பாடகர் கேகே, நேற்று கொல்கத்தா நஸ்ருல் மஞ்சாவில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல பாடல்களை பாடினார்.

பின்னர், இரவு 10.30 மணியளவில் தான் தங்கியிருந்த அறைக்கு சென்ற கே.கே., நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

மண்ணுலகைவிட்டு மறைந்த பிரபல பாடகரின் கேகே வின் கடைசி பர்பார்மன்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவை கண்ணீருடன் பகிர்ந்து வருகின்றனர் ரசிகர்கள்.

Views: - 932

2

1