ஓட்டல் அறையில் பிரபல நடிகர் சடலமாக மீட்பு… நடந்தது என்ன?

Author: Udayachandran RadhaKrishnan
2 August 2025, 10:55 am

ஓட்டல் அறையில் பிரபல நடிகர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மலையாள திரையுலகின் பிரபல மிமிக்ரி கலைஞரும், நடிகருமான கலாபவன் நவாஸ் (Kalabhavan Navas) ‘பிரகாம்பனம்’ என்ற மலையாளப் படத்தின் படப்பிடிப்பிற்காக எர்ணாகுளம், சோட்டாணிக்கராவில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார்.

நேற்று படப்பிடிப்பு முடிந்து அறையை காலி செய்ய திட்டமிட்டிருந்த நவாஸ், பேருந்து மற்றும் ரயில் நேரங்கள் குறித்து ஹோட்டல் ஊழியரிடம் விசாரித்திருந்தார். ஆனால், ஊழியர் அவரை சந்திக்கச் சென்றபோது, நவாஸ் தனது அறையில் மயக்கமடைந்து சுயநினைவின்றி இருப்பது கண்டறியப்பட்டது.

உடனடியாக ஹோட்டல் ஊழியர்கள் அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், பரிசோதனை செய்த மருத்துவர்கள், நவாஸ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.

இதையடுத்து, சோட்டாணிக்கரா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காவல்துறையினர் ஹோட்டல் அறையில் ஆய்வு செய்து, சிசிடிவி காட்சிகளை பரிசோதித்தனர்.

சோட்டாணிக்கரா காவல் நிலைய அதிகாரி செய்தியாளர்களிடம் பேசுகையில், “நவாஸ் தங்கியிருந்த அறையில் எவ்வித சந்தேகத்திற்குரிய பொருட்களும் கண்டறியப்படவில்லை,” என்று தெரிவித்தார். தற்போது, நவாஸின் உடல் எஸ்டி டாடா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று பிரேத பரிசோதனை முடிந்த பிறகு, அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

கலாபவன் நவாஸின் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

1995-ம் ஆண்டு ‘சைதன்யம்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான கலாபவன் நவாஸ், மிமிக்ரி கலைஞராகவும், பின்னணிப் பாடகராகவும், நடிகராகவும் பன்முகத் திறமைகளை வெளிப்படுத்தியவர். ‘மிமிக்ஸ் ஆக்‌ஷன் 500’, ‘ஹிட்லர் பிரதர்ஸ்’, ‘ஜூனியர் மாண்ட்ரேக்’, ‘மாட்டுப்பெட்டி மச்சான்’, ‘அம்மா அம்மாய்யம்மா’, ‘சந்தமாமா’, ‘தில்லானா தில்லானா’ உள்ளிட்ட பல மலையாளப் படங்களில் நடித்துள்ளார்.

Kalabavan Navas Dead

மேலும், ‘கலாபவன் சக்கர முத்து’, ‘சட்டம்பிநாடு’, ‘சீனியர் மாண்ட்ரேக்’, ‘வலியங்கடி’, ‘வீரபுத்திரன்’, ‘தல்சமயம் ஒரு பெண்குட்டி’, ‘ஏபிசிடி: அமெரிக்கன்-பார்ன் கன்ஃப்யூஸ்ட் தேசி’ போன்ற படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!