‘எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே’: பாடும் வானம்பாடி எஸ்.பி.பி.யின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று!!

Author: Aarthi Sivakumar
25 September 2021, 10:56 am
Quick Share

காலங்களை கடந்தும் கானங்களாய் மறைந்த பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

எஸ்பிபி, பாடும் நிலா பாலு என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பின்னணி பாடகர், இசை அமைப்பாளர், நடிகர், டப்பிங் கலைஞர், திரைப்பட தயாரிப்பாளர் என தான் தடம் பதித்த அனைத்து துறைகளிலும் வெற்றிக் கொடி நாட்டியவர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 6 மொழிகளில் காலத்தால் அழிக்க முடியாத, நெஞ்சை விட்டு நீங்காத பல ஆயிரக் கணக்கான பாடல்களை பாடியவர் எஸ்பிபி. 1946ம் ஆண்டு ஆந்திராவில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் பிறந்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

இதுவரை 16 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள இவர் 45 படங்களுக்கு இசையும் அமைத்துள்ளார். 5 தலைமுறைகளை கடந்து இசைப்பயணத்தில் பல சாதனைகளை புரிந்துள்ளார். மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கல்லூரிப்பருவத்தில் பாடகி எஸ்.ஜானிகியால் அடையாளம் காணப்பட்டு, அவரின் அறிவுறுத்தலின் பேரில் திரையுலகம் பக்கம் வந்தவர்

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து, ‘அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு’ என்ற பாடல் தான் எஸ்பிபி தமிழில் பாடிய முதல் சினிமா பாடல். ஆனால் அந்த பாடல் வெளி வரவில்லை. அதற்கு பிறகு சாந்தி நிலையம் படத்திற்காக பி.சுசிலாவுடன் இணைந்து பாடிய “இயற்கை என்னும் இளைய கன்னி” பாடல் தான் எஸ்பிபி பாடிய முதல் தமிழ் சினிமா பாடலாக கருதப்படுகிறது. தொடர்ந்து எம்ஜிஆருக்காக அடிமைப்பெண் படத்தில் ஆயிரம் நிலவே வா பாடல் மிகப் பெரிய ஹிட்டானது.

சாதனை:

தனது 54 வருட திரைப்பயணத்தில் 40,000 க்கும் அதிகமான பாடல்களை எஸ்பிபி பாடி உள்ளார். இது கின்னஸ் உலக சாதனையாகவே பார்க்கப்படுகிறது. 1981 ம் ஆண்டு கன்னட மொழியில், காலை 9 மணி துவங்கி இரவு 9 மணி வரையிலான 12 மணி நேரத்தில் 21 பாடல்களை ரெக்கார்டு செய்து சாதனை படைத்தவர் எஸ்பிபி. அது மட்டுமல்ல ஒரே நாளில் 19 தமிழ் பாடல்கள், 16 இந்தி பாடல்களையும் பாடி ரெக்கார்டிங் செய்து சாதனை படைத்த ஒரே பின்னணி பாடகர் எஸ்பிபி மட்டும் தான்.

விருதுகள்:

4 மொழிகளில் சிறந்த பாடகருக்கான தேசிய திரைப்பட விருதினை 6 முறை வென்ற எஸ்பிபி, ஆந்திரா மாநில அரசின் நந்தி விருதினை 25 முறை பெற்றுள்ளார். ஏராளமான தமிழக மற்றும் கர்நாடக அரசு விருதுகளையும் பெற்றுள்ளார். இந்திய சினிமாவிற்கு ஆற்றிய இசை சேவைக்காக என்டிஆர் தேசிய விருது, இந்திய சினிமாவின் Personality of the Year என்ற சில்வர் பீக்காக் விருது, மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்மவிபூஷன் ஆகிய விருதுகளையும் வென்றுள்ளார் எஸ்பிபி.

spbயின் கடைசி பாடல்:

தமிழ் சினிமாவிற்காக எஸ்பிபி கடைசியாக பாடிய பாடல் அண்ணாத்த படத்தில் டி.இமான் இசையில் இன்ட்ரோ பாடலான அண்ணாத்த அண்ணாத்த அடிதடி சரவெடி எல்லாம் கூத்தே என்ற பாடல் தான்.

மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த எஸ்பிபி கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கொரோனாவிலிருந்து மீண்டார். இருப்பினும் அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு 50 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் கடந்த ஆண்டு செப் 25ம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார்.

இவரது உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைபாக்கத்தில் அமைந்துள்ள அவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. பாடும் வானம்பாடி எஸ்பிபியின் மறைவு இசை உலகில் யாராலும் நிரப்ப முடியாத மாபெரும் இழப்பு ஆகும்.

பாடும் நிலா, பாட்டுத்தலைவன், பாடும் வானம்பாடி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ‘எந்தன் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்’ என்று அவர் பாடிய பாடலின் வரிகளுக்கு ஏற்ப மறைந்தாலும் மக்கள் மனதில் கானமாய் வாழும் SPB என்றுமே ஒரு சகாப்தம் தான்.

Views: - 208

3

0