எங்க பாட்டுதானே ஜெயிக்க வைக்குது; காசு கொடுத்தா என்ன? – கண்டபடி கேட்ட கங்கை அமரன்
Author: Prasad21 April 2025, 2:35 pm
5 கோடி நஷ்டஈடு
அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல கிளாசிக் பாடல்கள் ஆங்காகே பின்னணியில் இடம்பெற்றிருந்தன. அதில் “ஒத்த ரூபா தாரேன்”, “இளமை இதோ இதோ”, “என் ஜோடி மஞ்சக்குருவி” போன்ற இளையராஜா பாடல்களும் இடம்பெற்றிருந்தன. இதனை தொடர்ந்து தனது அனுமதி இல்லாமல் பாடல்களை பயன்படுத்தியதாக இளையராஜா தரப்பு “குட் பேட் அக்லி” திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு ரூ.5 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இந்த விவகாரத்தில் பலரும் இளையராஜாவை பணத்தாசை பிடித்தவர் என கடுமையாக விமர்சித்து வந்தனர்.

காசு கொடுத்தால்தான் என்ன?
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் பேசிய இசையமைப்பாளர் கங்கை அமரன், “7 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து இசையமைப்பாளரை அமர்த்தி அந்த இசையமைப்பாளர் மெட்டமைத்த பாடல்களுக்கு கைத்தட்டல் வரமாட்டிக்கிறது. ஆனால் எங்களது பாடல்களுக்கு கைத்தட்டல் வருகிறது. அப்படி என்றால் அதற்கான ஊதியம் எங்களுக்கு வரவேண்டும்தானே?
உங்க மியூசிக் டைரக்டருக்கு பணம் கொடுத்தும் அவரிடம் மியூசிக் வாங்க முடியாமல்தானே எங்கள் பாடல்களை பயன்படுத்துகிறீர்கள். அப்படி என்றால் எங்களுக்கு அதில் பங்கு உண்டுதானே. எங்களிடம் அனுமதியாவது பெறவேண்டும்தானே.
அனுமதி கேட்டால் இலவசமாகவே இளையராஜா அண்ணன் அனுமதி தந்துவிடுவார். கேட்காமல் பயன்படுத்தினால்தான் அவருக்கு கோபம் வரும். அண்ணனுக்கு பணத்தாசை எல்லாம் இல்லை. பணம் கொட்டிக்கிடக்கிறது. ஆனால் நாம் விதிப்படி நடந்துகொள்ளவேண்டும். யார் உருவாக்கிறார்களோ அவர்களுக்கு பங்கு உண்டு.
அஜித் படம் என்றெல்லாம் இல்லை, எல்லாம் எங்கள் பாட்டு அவ்வளவுதான். அதனால்தான் கேட்கிறோம். உங்கள் இசையமைப்பாளரால் மியூசிக் போட முடியவில்லை. எங்களது பாடல்தான் ஜெயிக்க வைக்கிறது” என்று மிகவும் உணர்ச்சிபொங்க பத்திரிக்கையாளருக்கு பேட்டி கொடுத்தார்.