இந்தியாவில் ஹாலிவுட் திரைப்படங்களின் ஆதிக்கம் அதிகரிக்கின்றதா.? முக்கிய வர்த்தக சந்தையாக உருவாகிறதா இந்தியா.?

Author: Mari
4 January 2022, 4:50 pm
Quick Share

கடந்த பல வருடங்களாகவே ஹாலிவுட் படங்களின் முக்கியமான சந்தையாக இந்தியா மாறி வருகிறது. இந்தியர்கள் அனைவரையும் சென்றடையும் வகையில், ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய மொழிகளிலும் ஹாலிவுட் படங்கள் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன. இந்தியாவில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையான மிகப்பெரிய ஓப்பனிங்குடன் சில ஹாலிவுட் திரைப்படங்களும் வெளியாகி வருகின்றன. இதனால், சில இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள், ஹாலிவுட் திரைப்படம் வெளியாகும் போது தங்களது திரைப்படங்களை வெளியிடத் தயங்குகின்றனர்.


இதனிடையே கடந்த வருடம், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகை கங்கனா ராவத் நடிப்பில் ‘தலைவி’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியானது. அதே சமயம், சாங் சி மற்றும் எப்-9 ஆகிய ஹாலிவுட் திரைப்படங்கள் இந்தியா முழுவதும் வெளியாகி வசூல் சாதனை செய்து வந்தன.

இதனால், அதிர்ச்சியடைந்த நடிகை கங்கனா ராவத், ஹாலிவுட் படங்களால் இந்திய படங்களின் வசூல் பாதிக்கிறது என்றும் அதனால் ஹாலிவுட் திரைப்படங்களின், இந்திய ஆதிக்கத்தை தடுக்க வேண்டும் என அதிரடியான கருத்தை தெரிவித்திருந்தார்.

அந்த வகையில், தற்போது, இந்தியா முழுவதும் ‘ஸ்பைடர் மேன் – நோ வே ஹோம்’ திரைப்படம் 200 கோடிகளை தாண்டி வசூலித்து வருகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல மாநிலங்கள் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே திரையரங்கில் அனுமதிக்கிற நிலையில் ஸ்பைடர் மேன் 200 கோடிகளை கடந்திருப்பதே சாதனைதான். அந்த வகையில், 2019-ல் வெளியான ‘அவென்ஜர்ஸ் என்ட் கேம்’ 373.22 கோடிகள் வசூலித்து முதலிடத்தில் உள்ளது. ‘அவென்ஜர்ஸ் இன்பினிட்டி வார் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெளியாகி 227.43 கோடிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

Views: - 376

0

0