இது பேய் படமா இல்லை சைன்ஸ் ஃபிக்சன் படமா? ஹவுஸ் மேட்ஸ் படத்தை பார்த்து குழம்பிப்போன ஆடியன்ஸ்!
Author: Prasad1 August 2025, 5:54 pm
தர்ஷன், ஆர்ஷா பைஜு ஆகியோரின் நடிப்பில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராஜவேல் இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “ஹவுஸ் மேட்ஸ்”. இத்திரைப்படத்தின் டிரெயிலர் வெளியான போதே ரசிகர்களின் மத்தியில் இத்திரைப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. இத்திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? என்பதை பார்க்கலாம்.
படத்தின் கதை
தர்ஷனும் ஆர்ஷாவும் காதலித்து திருமணம் செய்துகொள்கிறார்கள். இருவரும் தம்பதியினராக ஒரு புதிய வீட்டிற்கு குடிபோகிறார்கள். 12 வருட பழைய அபார்ட்மண்ட் அது. அங்கு குடிபோனதும் அந்த வீட்டில் பல அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் காளி வெங்கட்- வினோதினி தம்பதியினர் தங்களது குழந்தையுடன் ஒரு வீட்டில் வசிக்கின்றனர். அந்த வீட்டிலும் இது போன்ற அமானுஷ்யங்கள் நடக்கின்றன.

ஒரு காட்சியில் ஒருவருக்கொருவர் சுவற்றில் எழுதிக்கொள்ளும்போதுதான் படத்தின் முக்கியமான டிவிஸ்ட் வெளிப்படுகிறது. அதாவது காளி வெங்கட் குடும்பமும் தர்ஷனின் குடும்பமும் ஒரே வீட்டிற்குள்தான் வசிக்கிறார்கள். ஆனால் தர்ஷன்-ஆர்ஷா தம்பதிக்கு காளி வெங்கட்டின் குடும்பம் கண்ணுக்கு தெரியவில்லை. காளி வெங்கட் மற்றும் அவரது குடும்பத்திற்கு தர்ஷன்-ஆர்ஷா ஜோடி கண்ணுக்கு தெரியவில்லை. இந்த டிவிஸ்டிற்கு பிறகு இவர்களுக்குள் என்ன ஆனது? இந்த மர்மத்திற்கு பின்னணியில் யார் இருக்கிறார்? என்பதுதான் மீதி கதை.
படத்தின் பிளஸ்
தர்ஷன், ஆர்ஷா பைஜு, காளி வெங்கட், வினோதினி ஆகிய நால்வரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கின்றனர். இது படத்தின் மிகப்பெரிய பிளஸ். அடுத்ததாக ராஜேஸ் முருகேசனின் பின்னணி இசை படத்திற்கு பலமாக இருக்கிறது. சஸ்பென்ஸோடு காட்சிகளை கொண்டு செல்லும் விதமாகட்டும் சஸ்பென்ஸை உடைக்கும் இடமாகட்டும் அனைத்தும் மிகவும் விறுவிறுப்பாகவே அமைத்திருக்கிறார்கள். எம் எஸ் சதிஷின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். மிகவும் வித்தியாசமான கதையம்சம் என்பதால் திரைக்கதையும் அதற்கேற்றார் போல் சுவாரஸ்யமாகவே செல்கிறது.

படத்தின் மைனஸ்
எனினும் ஒரு கட்டத்தில் இத்திரைப்படத்தின் கதை அமானுஷ்யத்தில் இருந்து சைன்ஸ் ஃபிக்சனுக்குள் செல்கிறது. அந்த இடத்தில் இயக்குனர் தடுமாறியுள்ளார் எனவே கூறமுடிகிறது. “இது என்ன புது கதையா இருக்கு?” என்று ஆடியன்ஸ் புலம்பத் தொடங்கிவிடுகின்றனர். கடைசியில் இத்திரைப்படம் சைன்ஸ் ஃபிக்சனா? இல்லை ஹாரரா? என்ற குழப்பம் ஏற்பட்டுவிடுகிறது. இது திரைப்படத்தின் பலவீனம் என்றே சொல்லலாம். மற்றபடி இத்திரைப்படம் ஒரு சுவாரஸ்யமான திரைப்படமாகவே அமைந்திருக்கிறது.
ஒரு புதிய முயற்சியுடன் களமிறங்கியுள்ள “ஹவுஸ் மேட்ஸ்” படக்குழு ஆடியன்ஸ் கொடுக்கும் பணத்திற்கு ஒரு சிறந்த படைப்பையே கொடுத்திருக்கிறது. நிச்சயமாக இத்திரைப்படம் தர்ஷனுக்கு ஒரு நல்ல என்ட்ரிதான்.
