Imman Birthday Treat: முதல் முறையாக சூர்யாவுடன் இணைந்த இசையமைப்பாளர்!

24 January 2021, 7:23 pm
Quick Share

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 40ஆவது படத்தில் இசையமைப்பாளராக இமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் சூரரைப் போற்று. நீண்ட நாட்களுக்குப் பிறகு தியேட்டரில் வெளியாகாமல் ஓடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. எனினும், விமர்சன ரீதியாக சூரரைப் போற்று நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் நவரசா என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனால், இது வெப் சீரிஸாக உருவாக்கப்பட்டு வருகிறது.


மேலும், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் வாடிவாசல் படத்திலும் சூர்யா நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து சூர்யா தனது 40ஆவது படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்குகிறார். இதற்கு முன்னதாக சூர்யா – பாண்டிராஜ் காம்பினேஷனில் பசங்க 2 படம் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா40 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சூர்யா40 படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்க இருக்கிறார். இதற்கு முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த நிலையில், சூர்யா40 படத்திற்கு இசையமைப்பாளர் யார் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. தற்போது அது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இசையமைப்பாளர் இமானுக்கு பிறந்தநாள் டிரீட் கொடுக்கும் வகையில், இந்த அறிவிப்பு வந்துள்ளது.

அதாவது, சூர்யா40 படத்திற்கு இமான் இசையமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல் முறையாக இமான் சூர்யா படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இமான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கலாநிதி மாறன் மற்றும் இயக்குநர் பாண்டிராஜ் உடன் கைகோர்த்ததற்கு மகத்தான மகிழ்ச்சி. சூர்யாவின் படத்திற்கு இசையமைப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். உங்களது அளவுகடந்த அன்பிற்கும், ஆதரவுக்கும் எனது நன்றி. மகிழ்ச்சியான பிறந்தநாள் பரிசு என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக பாண்டிராஜ் இயக்கத்தில் வந்த கடைக்குட்டி சிங்கம் மற்றும் நம்ம வீட்டுப்பிள்ளை ஆகிய படங்களுக்கு இமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் பிப்ரவரி மாதத்தில் சூர்யா40 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, முக்கியமான பகுதிகள் முழுவதும் சென்னைக்கு வெளியில் படமாக்கப்பட இருக்கிறது என்று தகவல் தெரிவிக்கின்றது.

Views: - 0

0

0