க/பெ.ரணசிங்கம் படத்தின் விமர்சனம் ! தியேட்டர்காரர்களுக்கு சென்றடையாத ஒரு பொக்கிஷம்.

Author: Udayaraman
2 October 2020, 9:16 pm
Quick Share

வெளிநாட்டில் இறந்துபோன கணவனின் உடலை மீட்டு, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு பொட்டல் காடு கிராமத்துக்கு கொண்டுவரப் போராடும் சாதாரண பெண்ணின் கதையே க/பெ. ரணசிங்கம்.

ராமநாதபுரத்தின் ஒரு சிற்றூரில் மக்களின் பிரச்சினைகளுக்காகப் போராடும் குணம் கொண்ட ரணசிங்கம்(விஜய் சேதுபதி), வழக்கமாக எல்லா ஹீரோக்களை போல தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு வேண்டி போராடுகிறார். இதனால் அரசு அதிகாரிகளின் பகையைச் சம்பாதிக்கிறார். மக்களை திரட்டி போராட்டம் செய்யும் விஜய்சேதுபதி, ஒரு ஒருகட்டத்தில் தன்னுடன் போராடிக் கொண்டிருந்த அத்தனை பேரும் சுயநலத்தால் விலகி நிற்க, உண்மையான பிரச்சினைக்கு தன்னுடன் யாரும் நிற்கவில்லை என வருத்தப்படுகிறார். அப்படி இருக்கும் நிலையில், அவரின் மனைவியான அரியநாச்சி(ஐஷ்வர்யா ராஜேஷ்) பேச்சைக் கேட்டு வெளிநாடு சென்று வேலை பார்க்கிறார். அங்கேந்து இரண்டு வருடங்கள் கழித்து விஜய் சேதுபதி இறந்த செய்தி மட்டுமே வருகிறது.

இங்கிருக்கும் போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் ரணசிங்கத்தின் மீது சில வழக்குகள் தொடுத்து உள்ளதால், அவர் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டு வருவதில் பல்வேறு சிக்கல்கள் வாருகின்றன. அவரின் மனைவி அரியநாச்சி தன் கணவனின் உடலை மீட்க கவுன்சிலர், கவர்னர், கலெக்டர், எம்எல்ஏ, மத்திய அமைச்சர் என்று எல்லோரிடமும் சென்று அலைந்து கோரிக்கை மனு ஒன்றை கொடுக்கிறார். அதிகாரிகளிடம், விஜய்சேதுபதியின் பிணத்தை கேட்டு நொந்து போகிறார்.

இனி, இவர்களுடன் போராடி பயனில்லை என்று டெல்லி புறப்படுகிறார். 2 வயது கைக்குழந்தையுடன் கணவனின் உடலை மீட்கப் போராடும் அரியநாச்சி எப்படி தனது கணவனின் உடலை அவரால் மீட்க முடிந்ததா, என்பதே திரைக்கதை.

மக்கள் பிரச்சினை, தண்ணீர்ப் பிரச்சினையை என்று முதல் பாதி அப்படி இப்படி என்று கடத்திட்டாலும், இரண்டாம் பாதியை எமோஷனலாகவும், உருக்கமாகவும் பதிவு செய்துள்ளார் அறிமுக இயக்குனர் விருமாண்டி. வெளிநாட்டில் வேலை செய்யச் சென்றவர்கள் இறந்துவிட்டால் அவர்கள் உடலை இங்கே கொண்டு வர என்ன மாதிரியான சட்டச் சிக்கல்கள் நிகழும் என்பதில் அவர் காட்டி இருக்கும் காட்சிகள் அதிர்ச்சி அளிக்கிறது. முதல் படம் என்று நம்பமுடியாத அளவுக்கு அப்ளாஸ் அள்ளுகிறார் விருமாண்டி.

சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ் படங்களுக்கு பிறகு, மீண்டும் ஒரு Experimental முயற்சிக்கு கை கொடுத்த விஜய் சேதுபதிக்கு ஸ்பெஷல் Applause. ரணசிங்கம் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி பக்காவாகப் பொருந்துகிறார்.

விஜய் சேதுபதியுடனான காதல், ஊடல், அவரது குடும்பத்தின் மீதான அக்கறை, தனி மனுஷியாக இரண்டாம் பாதியைத் தன் தோள்களில் தாங்கி அழுத்தமான நடிப்பு கொடுத்த ஐஷ்வர்யா ராஜேஷுக்கு ஒரு மிக பெரிய Salute. காக்கா முட்டை, கனா, தர்மதுரைக்கு பிறகு இந்த படம் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மிக பெரிய மைல்ஸ்டோன்.

விஜய் சேதுபதியின் தங்கையாக நடித்த பவானிஸ்ரீ நம் மனதின் ஓரமாக பதிகிறார். ரங்கராஜ் பாண்டேவின் மிடுக்கான நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. எம்எல்ஏவாக நமோ நாராயணா, ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தையாக வேலராமமூர்த்தி,அருண்ராஜா காமராஜ், சுப்பிரமணிய சிவா, முனீஸ்காந்த், அபிஷேக், டி.சிவா, ஆகியோர் குணச்சித்ர நடிப்பால் மனதில் நிறைகிறார்கள்.

ராமநாதபுரம் கிராமத்தின் வறட்சியையும், மண்ணின் மணத்தையும் காட்டிய ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம், ஏக பிரமாதம். ஜிப்ரான் இசையில் வழக்கம்போல் அலட்டிக்கொள்ளாமல், கதையோட்டத்துடன் பொருந்துகிறது.

சூசகமாக மத்திய அரசை விமர்சிக்கும் சண்முக முத்துசாமியின் வசனங்கள் படத்துக்குப் மிகப்பெரிய +. ஒரு சாதாரண தொழிலாளியின் பிணம் 10 மாதங்கள் ஆனாலும் துபாயில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வராமல் இருப்பதையும் அதே, துபாயில் இறந்த ஒரு பிரபல நடிகையின் உடல் 72 மணி நேரங்களில் இந்தியா கொண்டுவரப்படுவதையும் இயக்குநர் சொன்னவிதம் திரையரங்கில் பார்த்து இருந்தால் விசில் பறந்திருக்கும்.

என்னதான் எக்கச்சக்க பிளஸ் பாய்ண்ட்கள் இருந்தாலும், இந்த கதைக்கு மூன்று மணி நேரம் தேவையில்லை. திடீரென்று விஜய் சேதுபதி வெளிநாட்டுக்கு வேலை செய்யச் ஒப்புக்கொள்வது காதில் பூ சுற்றல். இந்த மாதிரி சின்ன சின்ன குறைகளைத் தனியாக ஓரங்கட்டி பார்த்தால் தமிழ் சினிமாவின் அழுத்தமான படமாக க/பெ.ரணசிங்கம் தனி இடம் பெறுகிறது.

மொத்தத்தில், க/பெ.ரணசிங்கம், தியேட்டர்காரர்களுக்கு சென்றடையாத ஒரு பொக்கிஷம்.

Views: - 57

0

0