அன்பறிவ் அவுட்? மீண்டும் தோல்வி பட இயக்குனருடன் கைக்கோர்க்கும் கமல்ஹாசன்? கதறும் ரசிகர்கள்…
Author: Prasad23 June 2025, 3:45 pm
சறுக்கிய தக் லைஃப்
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த ஜூன் 5 ஆம் தேதி வெளியான “தக் லைஃப்” திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இத்திரைப்படம் மிகவும் மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டது.
மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் 37 வருடங்களுக்குப் பிறகு இத்திரைப்படம் வெளிவருவதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு இருந்தனர். ஆனால் அதே ஆவலோடு இத்திரைப்படத்திற்குச் சென்ற ரசிகர்கள் ஏமாந்துப்போய் திரும்பினார்கள். அந்தளவுக்கு எந்தவித சுவாரஸ்யமும் இல்லாமல் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.

ரூ.300 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம், வெளிவந்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் ரூ.90 கோடிகளே வசூல் செய்துள்ளது. இதற்கு முன்பு கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த “இந்தியன் 2” திரைப்படமும் தோல்வி திரைப்படமாக அமைந்தது என்றாலும், அத்திரைப்படம் ரூ.150 கோடிகளை வசூல் செய்திருந்தது. ஆனால் “தக் லைஃப்” திரைப்படமோ ரூ.100 கோடியையே தொடவில்லை.
மீண்டும் தோல்வி இயக்குனரா?
“தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து கமல்ஹாசன், சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதாக ஒப்பந்தமாகியிருந்தார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என செய்திகள் வெளிவந்தன.
இந்த நிலையில் தற்போது வேறு விதமான ஒரு தகவல் வெளிவருகிறது. அதாவது “வீர தீர சூரன்” பட இயக்குனர் எஸ் யு அருண்குமார் இயக்கத்தில் தனது அடுத்த திரைப்படத்தில் நடிக்கவுள்ளாராம் கமல்ஹாசன். “வீர தீர சூரன்” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் சுமாரான வரவேற்பையே பெற்றிருந்தது. இந்த நிலையில்தான் இத்திரைப்படத்தை இயக்கிய எஸ்.அருண்குமாருடன் கமல்ஹாசன் இணையவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்திரைப்படத்திற்கு பிறகுதான் அன்பறிவ் இயக்கவுள்ள திரைப்படத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ளாராம். இதனால் கமல்ஹாசன் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே “இந்தியன் 3” திரைப்படமும் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
