கழுதையை பத்தி கவலைப்பட்டீங்களா? தெரு நாய் ஆதரவாளர்களை வம்பிழுக்கும் கமல்!
Author: Prasad3 September 2025, 11:02 am
சூடுபிடிக்கும் தெரு நாய் விவகாரம்
சமீப காலமாகவே தெரு நாய் கடியால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் செய்திகளை பார்த்து வருகிறோம். குறிப்பாக சிறுவர் சிறுமியர் பலரும் தெருநாய் கடியால் அதிகளவு பாதிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த உச்சநீதிமன்ற உத்தரவு விவாதத்திற்குள்ளானது. அதாவது டெல்லி பகுதியில் தெருநாய்களுக்காக காப்பகம் ஒன்றை அமைத்து அதில் அதனை பராமரிக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
இந்த உத்தரவு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்த இந்த உத்தரவை எதிர்த்து தெரு நாய் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். நாடு முழுவதும் தெரு நாய் ஆதரவாளர்கள் உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து போராட்டங்கள் நடத்தினார்கள். எனினும் அதன் பின் உச்சநீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை சற்று மாற்றியமைத்தது.
அதாவது தடுப்பூசி போடப்பட்ட பிறகு நாய்கள், மீண்டும் அதே இடத்திற்கு விடப்படும் என அந்த உத்தரவை மாற்றியமைத்தது. எனினும் வெறிபிடித்த தெருநாய்களை தெருக்களில் விடக்கூடாது எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இந்த நடவடிக்கையை கொண்டு வர வலியுறுத்தியது.

இதனை தொடர்ந்து சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் கூட சூடு பிடிக்கும் அனல் வாதம் ஒன்று நடைபெற்றது. இதில் நடிகை அம்மு, நடிகர் படவா கோபி உள்ளிட்ட பலரும் தெருநாய்களுக்கு ஆதரவாக பேசிய நிலையில் அவர்கள் ட்ரோலுக்குள்ளாக்கப்பட்டனர்.
கமல்ஹாசன் சொன்ன பதில்?
இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது தெருநாய் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கமல்ஹாசன், “இந்த விவகாரத்திற்கு தீர்வு ரொம்ப சிம்ப்பிள்.

கழுதை எங்கே காணும் என்று யாராவது கவலை படுகிறார்களா? நமக்காக எவ்வளவு பொதி சுமந்திருக்கிறது. கழுதையை யாராவது காப்பாற்ற வேண்டும் என பேசுகிறார்களா? எல்லா உயிர்களையும் காப்பாற்ற வேண்டும், எவ்வளவு முடியுமோ காப்பாற்ற வேண்டும். அவ்வளவுதான் என்னுடைய கருத்து” என பதிலளித்தார். இவர் கூறிய பதில் தெருநாய் ஆதரவாளர்களை சற்று கடுப்பில் ஆழ்த்தியுள்ளதாக தெரிய வருகிறது.
