நாம் தமிழர் எதிர்ப்புக்கு பணிந்த கிங்டம் படக்குழு? வருத்தம் தெரிவித்து வெளியிட்ட அறிக்கை!
Author: Prasad6 August 2025, 4:21 pm
கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு
விஜய் தேவரகொண்டா நடிப்பில் கௌதம் தின்னனூரி இயக்கத்தில் கடந்த ஜூலை 31 ஆம் தேதி வெளியான திரைப்படம் “கிங்டம்”. இதில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸே நடித்துள்ளார். இத்திரைப்படம் வெளியாகி 6 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இத்திரைப்படம் ரூ.82 கோடி வசூல் ஆகியுள்ளது. அந்த வகையில் இத்திரைப்படம் கலவையான வரவேற்பையே பெற்றுள்ளது.
இந்த நிலையில் “கிங்டம்” திரைப்படத்தில் இலங்கை தமிழர்களை தவறாக சித்தரித்துள்ளதாகவும் அத்திரைப்படத்தில் வில்லனின் கதாபாத்திரத்திற்கு தமிழ் கடவுளான முருகனின் பெயரை சூட்டியுள்ளதாகவும் சர்ச்சை கிளம்பியது. குறிப்பாக நாம் தமிழர் கட்சியினர் இத்திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் தடை விதிக்க வேண்டும் என திரையரங்கின் முன் முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் “கிங்டம்” படத்தை தயாரித்த சித்தாரா என்டெர்டெயின்மன்ட்ஸ் நிறுவனம் வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

நாங்கள் மிகவும் வருந்துகிறோம்…
“நாங்கள் தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்கிறோம். மேலும் உள்ளூர் மாநில மக்களின் உணர்வுகளை புண்படுத்துவது போன்ற எந்த காட்சிகளும் படத்தில் இல்லை என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். படத்தின் Disclaimer பகுதியில் குறிப்பிடப்பட்டிருப்பது போல் இத்திரைப்படத்தின் கதை முற்றிலும் ஒரு கற்பனை கதை ஆகும்.
அப்படிப்பட்ட சூழலில், மக்களின் உணர்வுகள் புண்பட்டிருந்தால் அதற்காக நாங்கள் வருந்துகிறோம். படத்திற்கு ஆதரவு அளிக்குமாறு அன்புடன் வேண்டிக்கேட்டுக்கொள்கிறோம்” என “கிங்டம்” படத்தை தயாரித்த சித்தாரா என்டெர்டெயின்மன்ட்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் எதிர்ப்பிற்கு தயாரிப்பு நிறுவனம் பணிந்துள்ளதாக அக்கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
