இந்த மூஞ்ச தியேட்டர்ல வந்து பார்க்கணுமா? வன்மங்களுக்கு மத்தியில் கதாநாயகனாக களமிறங்கிய KPY பாலா!
Author: Prasad1 July 2025, 11:00 am
காமெடியன் டூ ஹீரோ
விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் பாலா. இவர் KPY சேம்பியன்ஸ் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரை ரசிகர்களுக்கு அறிமுகமானாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவரது நகைச்சுவை இவரது புகழை தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் கொண்டு சென்றது. இவரது கவுண்ட்டர் வசனங்களும் மிமிக்ரி குரல் வளமும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது மட்டுமல்லாது சிரிப்பலையிலும் ஆழ்த்தியது. மேலும் இவர் சமூக சேவை செய்வதில் மிகுந்த ஈடுபாடு உடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கதாநாயகனாக களமிறங்கும் பாலா!
பாலா, “ஜுங்கா”, “புலிகுத்தி பாண்டி”, “லாபம்” போன்ற பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது “காந்தி கண்ணாடி” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
இத்திரைப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதில் “உங்களுக்கும் எனக்குமான பயணம் ஒரு சின்ன தீப்பொறியாய் ஆரம்பிச்சது” என்று பின்னணியில் வசனம் பேசிகிறார் பாலா. “இந்த மூஞ்ச தியேட்டர்ல வந்து வேற பார்க்கணுமா?”, “ஹீரோ ஆகுறதுக்கு தகுதி வேணாமா?” போன்று பலரும் பல விதமாக பாலாவை குறித்து விமர்சிப்பது போல் பின்னணியில் வசனங்கள் வருகின்றன.
அதன் பின் மீண்டும் பேசத்தொடங்கும் பாலா, “என் முதுகுக்கு பின்னாடியும் என் மூஞ்சுக்கு முன்னாடியும் இது போல் நிறைய கேட்டாச்சு. இந்த மாதிரி என்னை எவ்வளவு விமர்சனங்கள் செய்தாலும் எல்லா விமர்சனத்தையும் எரிச்சு நீங்க கொடுத்த விமர்சனத்துல உங்களால இப்போ இங்க நிக்கிறேன்” என வசனம் பேசுகிறார். இவ்வாறு இந்த கிளிம்ப்ஸ் வீடியோ அமைந்துள்ளது.
பாலா கதாநாயகனாக அறிமுகமாகும் இத்திரைப்படத்தை ஷெரிஃப் என்பவர் இயக்குகிறார். இதில் பாலாவுடன் பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, நமிதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தை ஜெயிகிரண் என்பவர் தயாரிக்கிறார். விவேக்-மெர்வின் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கின்றனர்.