தள்ளிப்போகும் மதராஸி? தயாரிப்பாளர் எடுத்த முடிவால் முடிவாகாத பிசினஸ்?
Author: Prasad21 August 2025, 7:03 pm
விரைவில் அதிரடி காட்டப்போகும் SK!
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள “மதராஸி” திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். மேலும் இதில் வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், விக்ராந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஸ்ரீலட்சுமி பிரசாத் என்பவர் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். இத்திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் வெளியீட்டில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அப்படி என்ன சிக்கல்?
அதாவது “மதராஸி” திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமம் இன்னும் வியாபாரமே ஆகவில்லையாம். அதே போல் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் திரையரங்கு உரிமமும் வியாபாரம் ஆகவில்லையாம். இத்திரைப்படத்திற்கான விலையை வழக்கமான சிவகார்த்திகேயன் படத்தை விட அதிகமாக நிர்ணயித்துள்ளாராம் தயாரிப்பாளர்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் இதற்கு முன்பு வெளியான “அமரன்” திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்த காரணத்தினால் “மதராஸி” தயாரிப்பாளர் அதிக விலையை நிர்ணயித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆதலால் இவ்வளவு அதிக விலைக்கு வாங்க முடியாது என விநியோகஸ்தர்கள் கூறுகிறார்களாம். இதன் காரணமாக இதன் திரையரங்கு உரிமத்தின் வியாபாரம் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறதாம். இதனால் இத்திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
