மூனே நாள்ல ரூ.100 கோடி: டுவிட்டரில் டிரெண்டாகும் #Master100CRin3days ஹேஷ்டேக்!

16 January 2021, 4:14 pm
Master 100Cr - Updatenews360
Quick Share

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படம் திரைக்கு வந்து 3 நாட்கள் ஆன நிலையில் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வரையில் வசூல் செய்துள்ளது என்று சினிமா விமர்சகர்கள் தங்களது டுவிட்டர் பக்கத்தில் #Master100CRin3days என்ற ஹேஷ்டேக் உடன் கூறி வருகின்றனர்.

பிகில் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், ஆண்ட்ரியா, சாந்தணு, சஞ்சீவ், ஸ்ரீமன், பிரேம்குமார், ரம்யா சுப்பிரமணியன், பிரிகிதா, கௌரி கிஷான் என்று ஏராளனமான பிரபலங்கள் நடித்துள்ளனர். விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தனது எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மாஸ்டர் சந்தித்த சர்ச்சைகள்:
கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி சென்னையில் உள்ள விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதையடுத்து, நெய்வேலியில் நடந்த மாஸ்டர் படப்பிடிப்பின் போது வருமான வரித்துறை அதிகாரிகள் விஜய்யிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

பாரதீய ஜனதா கட்சி போராட்டம்:

கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி நெய்வேலியில் நடந்து வந்த மாஸ்டர் படத்தின் படப்பிடிப்போது பாரதீய ஜனதா பார்ட்டி உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர். என்னதான் முறையாக அனுமதி வாங்கியிருந்தாலும்ம் கூட, இது முற்றிலும் தடை செய்யப்பட்ட பகுதி, இங்கு படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்று கூறி பாரதீய ஜனதா பார்ட்டி உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர்.

நெய்வேலியில் குவிந்த ரசிகர்கள்:
விஜய் மற்றும் மாஸ்டர் படப்பிடிப்பின் போது வருமான வரித்துறையினர் சோதனை மற்றும் பாரதீய ஜனதா பார்ட்டி உறுப்பினர்களின் போராட்டம் இவற்றை கண்டிக்கும் வகையிலும், விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தளபதி ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக நெய்வேலியில் கூடினர்.

விஜய் செஃல்பி:
ரசிகர்களின் ஆதரவை பார்த்து வியந்த தளபதி விஜய், அவர்களுக்கு நன்றி தெரிவித்தும், அவர்களை பார்த்தவாறும் செல்ஃபி எடுத்துக் கொண்டார். விஜய் எடுத்த செல்ஃபி டுவிட்டரில் அதிகளவில் ரீடுவிட் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Thalapathy Vijay's Selfie With His Fans On The Last Day Shoot Of Master In  Neyveli - Social News XYZ

திரையரங்குகளில் 100 சதவிகித இருக்கை சர்ச்சை:
திரையரங்குகளுக்கு 100 சதவிகித இருக்கைகளுக்கு தமிழக அரசு முதலில் அனுமதி அளித்தது. இதையடுத்து, மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, அனுமதி திரும்பப் பெறப்பட்டது. தற்போது 50 சதவிகித இருக்கைகளுடன் கூடிய திரையரங்குகளில் மாஸ்டர் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

மாஸ்டர் லீக்:
படம் வெளியாவதற்கு முன்னதாக விஜய்யின் இன்ட்ரோ சீன் உள்பட ஒரு சில காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. இணையதளங்களில் வெளியான காட்சிகளை யாரும் மற்றவர்களுக்கு பகிரக்கூடாது என்று தயாரிப்பு நிறுவனம் கேட்டுக் கொண்டது. தொடர்ந்து, சமூக வலைதளங்களில் மாஸ்டர் படத்தின் காட்சிகளை லீக் செய்தவர் சோனி நிறுவன டிஜிட்டல் ஊழியர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காட்சிகளை இணையத்தில் லீக் செய்தது தொடர்பாக தனியார் நிறுவனம் மற்றும் ஊழியர் மீது புகார அளிக்க தயாரிப்பாளர் லலித்குமார் முடிவு செய்துள்ளார் என்று கூறப்பட்டது.

பதிப்புரிமை மீறல்:
கடந்த 12 ஆம் தேதி பதிப்புரிமை மீறல் தொடர்பாக, தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவுக்கு எதிராக சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்ய சென்னை எக்மோர் முதன்மை மேஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இசை பதிப்புரிமை நிறுவனமான நோவெக்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் தாக்கல் செய்த மனுவின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் ஒருவரான திங்க் மியூசிக் நிறுவனம் பதிப்புரிமை பெறாமல், கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி நடந்த மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது சில பாடல்கள் வெளியிடப்பட்டன. இது தொடர்பாக நோவெக்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் மனு தாக்கல் செய்திருந்தது.

பொங்கல் ரிலீஸ்:
கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பிறகு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாஸ்டர் படம் திரைக்கு வந்துள்ளது. என்னதான் 50 சதவிகித திரையரங்குகளுக்கு மட்டுமே அனுமதி அளித்திருந்தாலும் மாஸ்டர் படத்தின் வசூலுக்கு மட்டும் குறைவில்லை.

மாஸ்டர் முதல் நாள் வசூல்:
அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளியான மாஸ்டர் படம் முதல் நாளில் மட்டும் தமிழத்தில் ரூ.25 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அனைவருமே மாஸ்டர் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்த்துள்ளனர்.

அதில், கீர்த்தி சுரேஷ், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், நடிகை மாளவிகா மோகனன், சாந்தணு, மகேந்திரன், மலையாள நடிகர் திலீப், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, உதயா என்று ஏராளமான பிரபலங்கள் முதல் நாள் முதல் ஷோ பார்த்துள்ளனர். மேலும், தளபதி விஜய்யும் தேவி திரையரங்கில் முதல் நாள் முதல் ஷோ பார்த்துள்ளாராம். விஜய் தியேட்டருக்கு வரும் சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் சேதுபதி, இயக்குநர் மிஷ்கின், கார்த்திக் சுப்புராஜ், ராகவா லாரன்ஸ், சுசீந்திரன், யாஷிகா, ஐஸ்வர்யா தத்தா, ரம்யா என்.எஸ்.கே, கணேஷ் வெங்கட்ராமன், நிஷா கிருஷ்ணன், தன்யா ரவிச்சந்திரன், சாய் தன்ஷிகா என்று பலரும் மாஸ்டர் படத்தை பார்த்துள்ளனர்.

மாஸ்டர் 2 ஆம் நாள் வசூல்:
பொங்கல் பண்டிகையான 14 ஆம் தேதி, மாஸ்டர் படம் ரூ.40 கோடி வரையில் வசூல் குவித்தது என்று சினிமா விமர்சகர்கள் பலரும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளனர்.

மாஸ்டர் 3 ஆம் நாள் வசூல்: 100 கோடி வசூல்
மூன்றாம் நாளில் மாஸ்டர் படம் தமிழகத்தில் மட்டும் ரூ.55 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது என்று வர்த்தக ஆய்வாளர் கௌசிக் எல்.எம் கூறியுள்ளார். இந்த நிலையில், உலகம் முழுவதும் வெளியான மாஸ்டர் படம் 3 நாட்கள் முடிவில் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. இதன் காரணமாக டுவிட்டரில், #Master100CRin3days என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

விஜய்யின் 8ஆவது படம்: மாஸ்டர்
அதோடு, 100 கோடி வரையில் வசூலித்த படங்களின் பட்டியலில் விஜய்யின் 8ஆவது படமாக மாஸ்டர் படம் இணைந்துள்ளது. இதற்கு முன்னதாக விஜய் நடித்த துப்பாக்கி, கத்தி, தெறி, பைரவா, மெர்சல், சர்கார், பிகில் மற்றும் மாஸ்டர். தொடர்ந்து 6ஆவது படமாக மாஸ்டர் படம் ரூ.100 கோடி வரையில் வசூலித்த படங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 8

0

0