எம்ஜிஆர் மாதிரியே நடை உடை? மக்கள் திலகத்துக்கு போட்டியாக சினிமாவில் களமிறக்கப்பட்ட முக முத்து!
Author: Prasad19 July 2025, 5:34 pm
கலைஞரின் மூத்த மகன்!
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் காலம் சென்றவருமான கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் முக முத்து இன்று காலமானார். இவருக்கு வயது 77. கலைஞர் கருணாநிதி-பத்மாவதி தம்பதியருக்கு 1948 ஆம் ஆண்டு மூத்த மகனாக பிறந்தவர்தான் முக முத்து. தனது தந்தை கருணாநிதியுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாக அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார்.

கலைஞரின் மூத்த மகன் என்பதையும் தாண்டி இவர் “பூக்காரி”, “அணையா விளக்கு”, “பிள்ளையோ பிள்ளை” போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். கலைஞரால் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட முக முத்து, அக்காலகட்டத்தில் எம்ஜிஆர் போலவே வேடமணிந்து நடிப்பதாக பேச்சுக்கள் கிளம்பின. எம்ஜிஆருக்கு போட்டியாக சினிமாவில் கலைஞரால் களமிறக்கப்பட்டவர்தான் முக முத்து என்றும் பலர் கூறி வந்தனர்.

எம்ஜிஆர் போன்ற நடை உடை?
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பிரபல பத்திரிக்கையாளர் சேகுவேரா, முக முத்து குறித்து பல விஷயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார். “கலைஞரின் மூத்த மகனான முக முத்து 8 திரைப்படங்களில் நடித்துள்ளார். கலைஞரே இவரை எம்ஜிஆருக்கு போட்டியாக அறிமுகப்படுத்தியதாக கூறுவார்கள்.
1972 ஆம் ஆண்டு பிள்ளையோ பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து 4 திரைப்படங்களில் இவர் கதாநாயகனாக நடித்துள்ளார். பல துணை கதாபாத்திரங்களிலும் இவர் நடித்துள்ளார். பெரும்பாலும் அத்திரைப்படங்கள் கலைஞரின் கதை வசனத்தில் வெளிவந்த திரைப்படங்களாகவே இருக்கும்.

அவரது தலைமுடியில் இருந்து பாவனைகள் வரை அனைத்து எம்ஜிஆர் போலவே இருக்கும். எனினும் எம்ஜிஆர் என்ற பிம்பத்திற்கு முன் இவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை” என சேகுவேரா அப்பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
