ஆணவக்கொலைக்கு ஆதரவாக பேசி வசமாக சிக்கிய வாட்டர் மிலன் ஸ்டார்? பொளந்துக்கட்டும் நெட்டிசன்கள்!
Author: Prasad2 August 2025, 4:46 pm
வாட்டர் மிலன் ஸ்டார்
“கஜினி” படத்தில் சூர்யா தர்பூசணி சாப்பிட்டதை ரீகிரியேட் செய்து பிரபலமாக ஆனவர் திவாகர். ஆதலால் இவரை வாட்டர் மிலன் ஸ்டார் என்று அழைக்கின்றனர். தனக்கு மிகப்பெரிய நடிப்பு திறமை இருக்கிறது எனவும் தனது நடிப்புத் திறமையை பார்த்து பலரும் பாராட்டியிருக்கிறார்கள் எனவும் ஒவ்வொரு பேட்டியில் கூறி வருபவர் திவாகர்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் சூரியை போல் சின்ன சம்பளத்தில் தன்னால் நடிக்க முடியாது என கூறியது ரசிகர்களை கடுப்பாக்கியது. மேலும் “கருப்பு” டீசரில் சூர்யா தான் “கஜினி” படத்தில் தர்பூசணி சாப்பிடும் காட்சியை ரீகிரியேட் செய்திருந்தார். இதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்த திவாகர் “தன்னுடைய நடிப்பை சூர்யா ரீகிரியேட் செய்துவிட்டார்” என பகிர்ந்திருந்தார். இது சூர்யா ரசிகர்களை கோபத்திற்குள்ளாக்கியது.

வாய் விட்டு வசமாக சிக்கிய திவாகர்!
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட திவாகரிடம் கவின் ஆணவக்கொலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு திவாகர், “என்னுடைய ஆசை என்னவென்றால் சுர்ஜித்தின் எதிர்காலமும் நன்றாக இருந்திருக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களும் பாதிக்கப்படாமல் இருந்திருக்கலாம். பிள்ளைகள் அவரவர்களது குடும்பத்திற்கு ஏற்றார் போல் நடந்துகொள்வது சிறந்தது.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு பழக்கவழக்கங்கள் இருக்கும். அவர்கள் இஷ்டப்பட்ட வாழ்க்கையை குடும்பத்தின் மூலமாக அமைத்துக்கொண்டால் இது போன்ற பிரச்சனைகள் வராது. பாதிக்கப்பட்ட பையன் அவர்கள் குடும்ப வட்டத்திற்குள் இருக்கும் யாரையாவது திருமணம் செய்ய நினைத்திருந்தால் பிரச்சனை இல்லாமல் இருந்திருக்கும்” என பதிலளித்தார். அவர் இவ்வாறு பதிலளித்த பேட்டி இணையத்தில் வைரல் ஆன நிலையில் நெட்டிசன்கள் அவரை கண்டபடி விமர்சித்து வருகின்றனர்.
