ஒரே ஒரு விஜய் படத்தால் சுக்குநூறாகிப்போன தயாரிப்பாளரின் வாழ்வு! ஒரு மனுஷனுக்கு இவ்வளவு கஷ்டமா?
Author: Prasad25 August 2025, 5:49 pm
அட்டர் ஃபிளாப்…
2015 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வெளிவந்த ஃபேன்டசி திரைப்படம் “புலி”. இத்திரைப்படம் விஜய்யின் கெரியரில் மிகவும் வித்தியாசமான திரைப்படமாக அமைந்திருந்தாலும் எதிர்பார்த்தளவு ரசிகர்களை கவரவில்லை. இதன் காரணமாக பாக்ஸ் ஆஃபீஸில் படு தோல்வியடைந்தது.
இத்திரைப்படத்தை பி.டி. செல்வகுமார் என்பவர் தயாரித்திருந்தார். இவர் மாதவனின் “ஒன்பதுல குரு” என்ற திரைப்படத்தை இயக்கியவர். மேலும் பல திரைப்படங்களை தயாரித்தும் வெளியிட்டும் உள்ளார். இவர் நடிகர் விஜய்யின் முன்னாள் பிஆர்ஓவாக செயல்பட்டவர். இந்த நிலையில்தான் நடிகர் விஜய் இவரிடம் “புலி” படத்தை தயாரிக்குமாறு கூறியிருக்கிறார். எனினும் மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவான இத்திரைப்படம் படுதோல்வியடைந்தது.

தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமார் 125 திரைப்படங்களை வெளியிட்டதற்கான பாராட்டு விழாவும் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கும் விழாவும் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய அவர், “புலி” திரைப்படத்தை தயாரித்தப்போது சந்தித்த சவால்களை குறித்து பேசியுள்ளார்.
என் வாழ்க்கையே சுக்குநூறாகிப்போச்சு…
“நான் காசேதான் கடவுளடா என்ற ஒரு படத்தை இயக்குவதாக இருந்தேன். அந்த சமயத்தில்தான் விஜய் என்னை அழைத்து ‘எத்தனை நாளுக்குத்தான் பிஆர்ஓவாக இருப்பீர்கள். எனது அடுத்த படத்தை தயாரியுங்கள்’ என கூறினார். அதுதான் புலி.
அத்திரைப்படத்தின் கதையில் சிம்புதேவன், வில்லி கதாபாத்திரத்திற்கு ஷோபனாவின் பெயரை எழுதிவைத்திருந்தார். ஆனால் இதில் ஸ்ரீதேவி நடித்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன். இந்த படத்திற்கு ஹிந்தி மார்க்கெட்டை உருவாக்கலாம் என நினைத்தேன். அதன்படிதான் மும்பைக்குச் சென்று ஸ்ரீதேவியிடம் சாமர்த்தியமாக பேசி சம்மதிக்க வைத்தேன்.
இப்படத்தில் ஒரு தளபதி கதாபாத்திரத்திற்கு சுதீப்பை அணுகினேன். அவருக்கு பெரிய சம்பளத்தை கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்தேன். அதனை ஒரு பேன் இந்தியா படமாக யோசித்தேன். முதல் பேன் இந்திய படம் புலிதான். புலி திரைப்படம் ரூ.100 கோடி வியாபாரத்தை முதன்முதலில் தொட்ட படம்.
படத்தின் வேலைகள் முடிந்த பிறகு மார்க்கெட்டிங் செய்தோம். ஆனால் என்னுடைய கெட்ட நேரம், என்னை எப்படியாவது காலி செய்துவிட வேண்டும் என்று சதி திட்டம் நடந்தது. விஜய் என்னிடம் நட்பாக பழகுவது கூட இருந்தவர்களுக்கு பிடிக்கவில்லை. படம் வெளியாவதற்கு முந்தைய நாள் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது.

எப்போதும் படம் வெளியாவதற்கு முந்தைய நாள் வருமான வரித்துறை ரெய்டு வராது. ஆனால் கூட இருந்தவர்கள் செய்த சதி வேலையால் இது நடந்தது. எப்படியாவது விஜய்க்கு என் மீது வெறுப்பை உண்டாக்க வேண்டும் என்ற சூழ்ச்சி நடந்தது.
என் வீடு, என் சம்பந்தப்பட்டவர்களின் வீடு, விஜய் வீடு, அவரது அப்பா வீடு என அனைத்து இடங்களிலும் இரவு வரை வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. படம் வெளிவராது என செய்திகள் பரவுகின்றன. எனது 27 வருட உழைப்பு சுக்குநூறாக்கப்பட்டது. இரவோடு இரவாக விநியோகஸ்தர்களை அழைத்தேன். அவர்கள் அனைவரும் ஐடி ரெய்டுக்கு பயந்து மாறு வேஷத்தில் வந்தார்கள்.
பல போராட்டங்களுக்கு பிறகு அடுத்த நாள் படத்தை ரிலீஸ் செய்தேன். படம் அட்டர் ஃப்ளாப் என்று ரிசல்ட் வந்தது. இந்த நிலைமையில் வேறு எவராவது இருந்திருந்தால் தற்கொலைதான் செய்திருப்பான்.
அந்த படம் ஃபிளாப் ஆனது. ஆனால் விஜய்யின் சம்பளம் அடுத்த படத்தில் அதிகரித்தது. என் படத்தில் அவருக்கு ரூ.25 கோடி சம்பளம். அடுத்த படத்தில் அவருக்கு ரூ.45 கோடி சம்பளம். ஏனென்றால் பிசினஸ் உயர்ந்தது. அது எனது சாதுர்யம். இது எழுதப்படாத உண்மை” என பி.டி. செல்வகுமார் மிகவும் வேதனையோடு தனக்கு நடந்த நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டுள்ளார்.
