வா தலைவா வா, ரஜினியை சீண்டும் ரசிகர்கள்: டுவிட்டரில் டிரெண்டாகும் #அரசியலுக்குவாங்கரஜினி ஹேஷ்டேக்!

Author: Udayaraman
10 January 2021, 1:40 pm
Quick Share

ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி அவரது ரசிகர்கள் சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி முதல் தான் அரசியலுக்கு வருகிறேன், அரசியலுக்கு வருகிறேன் என்று பாவலா காட்டியவர் நடிகர் ரஜினிகாந்த். சிஸ்டம் சரியில்ல, எல்லாத்தையும் மாத்தனும் என்றெல்லாம் பீலா விட்டார். கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி ஜனவரியில் கட்சி துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு #மாத்துவோம்எல்லாத்தையும்மாத்துவோம் #இப்போஇல்லேன்னாஎப்பவும்_இல்ல என்று டுவிட்டரில் பதிவிட்டார்.

அதன் பிறகு ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் நடந்த அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அங்கு படக்குழுவினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து தானும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அவருக்கு நெகட்டிவ் என்று வந்தது. எனினும், அவருக்கு ரத்த அழுத்தம் ஏற்ற இறக்கமாக இருந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பிறகு சென்னை திரும்பிய ரஜினிகாந்த் திடீரென்று அறிவிப்பு வெளியிட்டார். அதில் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்தார்.

இது அவருக்கும் மட்டுமல்லா, சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என்று அனைவருக்குமே அதிர்ச்சியாக இருந்தது. இந்த நிலையில், தற்போது ரஜினி ரசிகர்கள், ரஜினி மக்கள் மன்றத்தினர் என்று அனைவரும் ஒன்றிணைந்து சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு ஊர்களிலிருந்து சென்னை வந்த ரஜினி ரசிகர்கள், வா தலைவா வா, இந்த நாடு முன்னேற அரசியலுக்கு வா தலைவா வா, வா தலைவா வா மக்கள் தலைவா வா தா தலைவா தா மக்கள் நல்லாட்சி தா என்றெல்லாம் டயலாக் கொண்ட பதாதைகளுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும், #அரசியலுக்குவாங்கரஜினி என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருவதோடு, வள்ளுவர் கோட்டம் அழைக்கிறது என்ற ஹேஷ்டேக் பதிவிட்டு அங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
முன்பெல்லாம் அரசியல் கட்சி சரியில்லை என்றால் போராட்டம் நடத்துனாங்க. திட்டம் சரியில்லை என்றாலும் போராட்டம் நடத்துனாங்க. ஆனால், இப்போது ஒரு மனிதன் தான் அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்தும் கூட, அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று போராட்டம் நடத்துராங்க. காலம் எங்கு போய் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம், அனுமதி எப்படி கிடைத்தது. யார் கொடுத்தது.

இப்படியெல்லாம் போராட்டம் நடத்தினால், கொரோனா வராது. திரையரங்கில் 100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி கொடுத்தால் கொரோனா வந்திடுமோ என்றெல்லாம் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தல் முடிந்த பிறகே அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஹைதராபாத்தில் நடக்க இருந்த அண்ணாத்த படப்பிடிப்பு ரஜினியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு, வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் தான் அண்ணாத்த படப்பிடிப்பு நடக்கஇருப்பதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Views: - 53

0

0