மீண்டும் ரஜினியுடன் இணையும் கே எஸ் ரவிக்குமார்? ராணா சீக்ரெட் வெளியீடு!

Author: Udayaraman
28 January 2021, 4:21 pm
Quick Share

ராணா படம் குறித்து மீண்டும் ரஜினிகாந்த் கதை கேட்டதாகவும், விரைவில் அவரை வைத்து ராணா இயக்க இருப்பதாகவும் கே எஸ் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

புரியாத புதிர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அவதாரம் எடுத்தவர் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார். சரத்குமார், விஜயகாந்த், ரஜினிகாந்த் என்று மாஸ் ஹீரோக்களை வைத்து ஏராளமான படங்களை இயக்கி ஹிட் கொடுத்துள்ளார். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநர்களில் கே எஸ் ரவிக்குமாரும் ஒருவராக இருந்தார். இதுவரை 40க்கும் அதிகமான படங்களை இயக்கியுள்ளார். தற்போது படங்களை இயக்குவதை விட படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். ஏராளமான படங்களில் நடிக்கவும் செய்துள்ளார்.

தற்போது அண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கான கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் பிக்பாஸ் புகழ் தர்ஷனுக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதோடு, இந்த படத்தை தயாரிக்கவும் செய்கிறார். கூகுள் குட்டப்பன் படத்தின் பூஜை இன்று நடந்தது. அதோடு, பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியும் நடந்தது. அப்போது பேசிய கே எஸ் ரவிக்குமார் கூறியிருப்பதாவது: மாதத்திற்கு ஒருமுறை ரஜினியிடம் பேசி வருகிறேன். அண்மையில் கூட ராணா படம் குறித்து ரஜினி கேட்டறிந்தார். கதை நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார்.

இப்போதைய சூழலில் என்னால், முடியாது. கூடிய விரைவில், இந்தப் படத்தில் இணையலாம் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தெனாலி, படையப்பா, வரலாறு ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்கள் வராது. எந்த சூப்பர்ஹிட் படமாக இருந்தாலும், அந்தப் படத்தை அதன் முதல் பாகத்துடன் ஒப்பிட்டு தான் பேசுவார்கள். ஆதலால், இரண்டாம் பாகம் பற்றி நான் ஒரு போதும் யோசித்தது கிடையாது என்று கூறியுள்ளார்.

Views: - 116

0

0