அண்ணாத்த ஷூட்டிங்கில் கலந்து கொண்ட ரஜினி அண்ட் நயன்தாரா?

Author: Udhayakumar Raman
22 March 2021, 10:36 pm
Quick Share

சென்னையில் நடந்து வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் மற்றும் நயன் தாரா ஆகியோர் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு இமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி ஆகியோர் உள்பட பலர் நடிக்கின்றனர். ஹைதராபாத்தில் நடந்து வந்த அண்ணாத்த படப்பிடிப்பின் போது படக்குழுவினருக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக, ரஜினிகாந்தும், கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.

அதில், அவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர், வீடு திரும்பினார். அதன் பிறகு ஓய்வில் இருந்து வந்தார். இதன் காரணமாக ஹைதராபாத் படப்பிடிப்பை ரத்து செய்த படக்குழுவினர் ரஜினியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு சென்னையிலேயே படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருந்தனர். 2 மாதங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

கோகுலம் ஸ்டூடியோவில் நடந்து வரும் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா ஆகியோர் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இது குறித்து தயாரிப்பு நிறுவனம் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. வரும் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அண்ணாத்த படம் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 62

2

0