‘அண்ணாத்த’க்கு அடித்தளம் போட்ட விஸ்வாசம் : வாழ்க்கையில் மறக்க முடியாத படம்… ரகசியத்தை உடைத்த ரஜினிகாந்த்..!! (ஆடியோ)

Author: Babu Lakshmanan
15 November 2021, 5:01 pm
Quick Share

அண்ணாத்த படம் உருவான விதம் தொடர்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களிடம் பகிர்ந்துள்ள ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் சவுந்தர்யா தொடங்கியுள்ள ஹூட் செயலியில் இணைந்துள்ளார். தனது அறிவிப்புகளை முதலில் டுவிட்டரில் அறிவித்து வந்த அவர், தற்போது தனது மகளின் ஹுட் செயலில் ஆடியோவாக அனைத்து விஷயங்களையும் பகர்ந்து வருகிறார்.

அந்த வகையில், இன்று அண்ணாத்த படம் உருவான விதம் குறித்து தனது ரசிகர்களிடையே அவர் இன்று பகிர்ந்து கொண்டார். அந்த ஆடியோவில், அவர் கூறியிருப்பதாவது :- பேட்ட திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. காலா, கபாலி திரைப்படங்களின் வயசான ரோல் பண்ணியிருந்தேன். பேட்ட திரைப்படத்தில் கார்த்திக் சுப்புராஜ் என்னை ஸ்டைலிஷாக காட்டி இருந்தார்.

Ajith Viswasam 1 - Updatenews360

பேட்ட திரைப்படத்தின்போது சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருந்த விஸ்வாசம் திரைப்படமும் வெளியானது. பேட்ட, விஸ்வாசம் இரண்டு திரைப்படங்களும் சூப்பர் ஹிட் ஆனது. விஸ்வாசம் திரைப்படம் இவ்வளவு பெரிய ஹிட் ஆகி இருப்பதால் அதனை பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன். படத்தின் தயாரிப்பாளர் நண்பர் தியாகராஜனிடன் கேட்டு விஸ்வாசம் திரைப்படத்தை பார்த்தேன்.

படம் பார்த்தபோது நல்லாவே இருந்தது. இடைவேளை முடிந்தது, இவ்வளவு பெரிய சூப்பர் ஹிட் ஆவதற்கு படத்தில் என்ன இருக்கு என நான் யோசனை செய்தேன். ஆனால், போகபோக படத்தின் கிளைமேக்ஸ் நெருங்க நெருங்க படத்தின் நிறமே மாறிவிட்டது. Excellent ஆக இருந்தது சூப்பர் படம்.. எனக்கு தெரியாமலேயே கையை தட்டினேன். உடனே தியாகராஜன் சாரிடம் கூறி சிவாவை சந்தித்தேன்.

போட்டோல அவர பார்த்திருக்கிறேன். அவ்வளவு பெரிய உடம்பை வச்சிக்கிட்டு, சிவா குழந்தை மாதிரி.. அவரை பார்த்ததும் பிடித்துவிட்டது. அவருக்கு வாழ்த்துக்களை சொல்லி, எனக்கு கதை கேட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

“நாம் சேர்ந்து படம் பண்ணுவோம், எனக்கு கதை தயார் செய்யுங்கள் என்று சிவாவிடம் சொன்னபோது, உங்களுக்கு ஹிட் கொடுப்பது ரொம்ப ஈஸி என சிவா கூறினார். எனக்கு இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஹிட் கொடுப்பது ரொம்ப ஈஸி என இதுவரை என்னிடம் சொன்னது இல்லை. எப்படி ஈஸி என்று சொல்கிறீர்கள் என்று சிவாவிடமே கேட்டேன்.

அதற்கு அவர், இரண்டு விசயம் முக்கியம். முதலில் நல்ல கதையில் நீங்கள் இருக்க வேண்டும். தளபதி, முத்து, அண்ணாமலை, பாட்ஷா, படையப்பா ஆகியவை நல்ல கதைகள்; அதில் நீங்கள் இருந்திங்க.. அடுத்ததா நீங்க கிராமத்து கதை பண்ணி ரொம்ப நாள் ஆகிறது. இது ரெண்டும் இருந்தாபோதும் சார்னு சொன்னார். அவர் சொன்ன விதம் எனக்கு பிடித்திருந்தது.

கதை சொல்ல 15 நாட்கள் அவகாசம் கேட்டார், ஆனால், 12வது நாளிலேயே வந்து கதை சொன்னார். கதை சொல்லும்போது தண்ணி வேணும்னு சொன்னார். தண்ணி சாப்பிட்டுகிட்டே கதை சொன்னார். தண்ணி என்றால் சாதாரண தண்ணிதான். வேறு எதையும் நினைக்காதீர்கள். கதை சொல்ல சொல்ல, கிளைமேக்ஸ்ல எனக்கு தெரியாமயே கண்ணீர் வந்துவிட்டது.

அப்படியே அவர்கிட்ட கையை கொடுத்து, சார் சூப்பர்னு சொன்னேன். இந்தப் படத்தை குடும்பம் குடும்பமாக வந்து பார்ப்பாங்கனு சொன்னாரு. சொன்னதையே படமாக எடுங்கனு சிவாவிடம் கூறினேன். அதேமாதிரி சொல்லி அடித்திருக்கிறார் சிவா. அண்ணாத்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. சிவாவுக்கு நன்றி. அண்ணாத்த என் வாழ்க்கையில் மறக்க முடியாத திரைப்படம். அண்ணாத்த படத்தின் பல விஷயங்கள் நடந்தது. இதைப் பற்றி வரும் காலங்களில் ஹுட் செயலில் பகிர்ந்து கொள்கிறேன், நன்றி… வணக்கம், எனக் கூறியுள்ளார்.

Views: - 526

1

0