மூனே நாள்ல அயலான் படத்தை முடித்த ரகுல் ப்ரீத் சிங்!

19 January 2021, 5:04 pm
Quick Share

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் படத்தின் தனது காட்சிகளை வெறும் 3 நாட்களிலேயே நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துக் கொடுத்துள்ளார்.


இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் அயலான். சைன்ஸ் பிக்‌ஷன் ஜானரில் உருவாகி வரும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். மேலும், இஷா கோபிகர், சரத் கேல்கர், யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா, பால சரவணன் ஆகியோர் உள்பட பலர் நடிக்கின்றனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை 24ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் மாதம் முதல் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் 23 ஆம் தேதி வரை அயலான் படத்தின் படப்பிடிப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடையும் என்று கூறப்படுகிறது. ஒரு வேளை படக்குழுவினர் ஓய்வு அறிவித்தால் இன்னும் 20 நாட்கள் நீடிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அயலான் படத்தை வரும் ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர். ஆனால், கிராபிக்ஸ் பணிகளுக்கு கிட்டத்தட்ட 9 மாதங்கள் தேவைப்படுவதால், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும். அப்படியில்லை என்றால் வரும் 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், படத்தில் அவந்திகாவாக வரும் ரகுல் ப்ரீத் சிங் தனது 3 நாட்கள் கால்ஷீட்டை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்துள்ளார்.

இது குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கிட்டத்தட்ட அயலான் படத்தின் அனைத்து காட்சிகளையும் முடித்துவிட்டேன். இது என்னுடைய 3 ஆவது நாள் படப்பிடிப்பு. என்னவொரு உணர்ச்சிமிக்க இயக்குநர், இனிமையான சக நடிகர் சிவகார்த்திகேயன் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: உங்களுடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி ரகுல் ப்ரீத் சிங். என்னை எப்போதும் ஆங்கிலத்தில் பேச வைத்ததற்கு நன்றி. நான் பிரிட்டிஷ் இங்கிலீஸ் பேசுனேன் என்று நினைக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Views: - 0

0

0