என் வீட்டை இடிச்சி! அம்மாவை தெரு தெருவா அலையவிட்டு?- ஆர்யாவின் மறுபக்கத்தை போட்டுடைத்த சந்தானம்
Author: Prasad6 May 2025, 11:55 am
நண்பேன்டா!
சந்தானமும் ஆர்யாவும் முதன் முதலில் இணைந்து நடித்த திரைப்படம் “ஒரு கல்லூரியின் கதை”. இத்திரைப்படத்தில் பணியாற்றிய சமயத்தில் இருவரும் மிகவும் நட்பாக பழகத் தொடங்கினர். அதன் பின் ஆர்யாவுடன் இணைந்து அவர் நடித்த “பாஸ் என்கிற பாஸ்கரன்” திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இவர்களின் காம்போ ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ஆர்யா நடித்த பல திரைப்படங்களில் அவர் நடித்திருந்தார். எனினும் சினிமாவில் மட்டுமன்றி நிஜ வாழ்விலுமே இருவரின் நட்பு ஆழமாக இருக்கிறது. இப்போதும் அவர்கள் சிறந்த நண்பர்களாகவே வலம் வருகின்றனர். இந்த நிலையில் சந்தானம் நடிப்பில் ஆர்யா தயாரிப்பில் வெளியாகவுள்ள “DD Next Level” திரைப்படத்தின் Pre Release நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பேசிய சந்தானம் ஆர்யா தனது வீட்டை இடித்த சம்பவத்தை குறித்து நகைச்சுவையுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
என் வீட்டை இடிச்சிட்டான்…
அதாவது சந்தானம் சென்னையில் ஒரு இடத்தில் வீடு ஒன்று விலைக்கு வாங்கியிருந்தாராம். அந்த வீடு கொஞ்சம் பழைய வீடு போல் இருந்ததால் அதனை புதுப்பித்துவிட்டு அதன் பின் அதில் குடும்பத்துடன் குடியேறலாம் என நினைத்தாராம் சந்தானம்.
அதற்கான வேலைகள் போய்க்கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள் ஆர்யா சந்தானத்தை தொடர்புகொண்டு “எங்கே இருக்கிற?” என கேட்க, அதற்கு சந்தானம், “ஒரு வீடு ஒன்று வாங்கியிருக்கிறேன். அதனை புதுப்பிக்கும் வேலை போய்க்கொண்டிருக்கிறது” என கூறினாராம்.
உடனே ஆர்யா அந்த இடத்துக்கு வந்து அந்த வீட்டை முழுவதும் சுற்றிப்பார்த்துவிட்டு, “என்ன மச்சான் இந்த வீடு நல்லாவே இல்லை, பேசாமல் இந்த வீட்டை இடித்துவிடு” என்று சொன்னாராம். ஆர்யா இப்படி சொன்னதும் சந்தானத்திற்கு அதிர்ச்சி ஆகிவிட்டதாம்.
“மச்சான், அப்படி எல்லாம் இந்த வீட்டை இடிக்க முடியாது. நான் இந்த வீட்டை வாங்கிவிட்டேன். எனது குடும்பத்திடமும் சொல்லிவிட்டேன். இந்த வீட்டை இடித்தால் நிறைய செலவாகும்” என்று சந்தானம் கூறினாராம். ஆனால் ஆர்யோவா, “நீ சும்மா இரு. இப்போ இப்படித்தான் ஏடாகூடமாய் செய்வாய், ஆனால் பின்னாளில் இது சரியில்லை அது சரியில்லை என்று சொல்லிக்கொண்டிருப்பாய்” என்று கூறிவிட்டு, தனது நண்பர் ஒருவருக்கு ஃபோன் செய்து வீட்டை இடிப்பதற்கான வாகனங்களை கொண்டுவரச் செய்து நான்கு நாட்களில் வீட்டை தரைமட்டமாக்கி இடிந்து விழுந்த பாகங்களையும் எடுத்துக்கொண்டு போய்விட்டார்களாம். அந்த இடத்தில் வீடு இருந்ததற்கான அடையாளமே இல்லையாம்.
அதன் பின் ஒரு வெள்ளிக்கிழமை சந்தானத்தின் அம்மா, அந்த வீட்டிற்கு விளக்கு ஏற்றச் சென்றிருக்கிறார். ஆனால் அங்கு அவரால் வீட்டை கண்டுபிடிக்க முடியவில்லை. தெரு தெருவாக வீட்டைத் தேடி அலைந்துவிட்டு, சந்தானத்திற்கு ஃபோன் செய்து, “நம்ம வீட்டை காணோம்பா” என்று கூறினாராம்.
அதன் பின் சந்தானம் நடந்ததை கூறியபோது, “ஏன்டா நீங்க ரெண்டு பேரும் படத்துலதான்டா இப்படி பண்ணுவீங்க, நிஜ வாழ்க்கையிலுமா இப்படி பண்ணுவீங்க?” என்று திட்டி தீர்த்தாராம். இந்த சம்பவத்தை சந்தானம் பகிர்ந்துகொண்டபோது அந்த அரங்கத்தில் சிரிப்பலை விண்ணை தட்டியது.