நடிகையிடம் தகாத முறையில் நடந்துகொண்ட விவகாரம்; நேரில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்
Author: Prasad9 July 2025, 4:04 pm
பிரபல நடிகையின் குற்றச்சாட்டு
பிரபல மலையாள நடிகையான வின்சி அலாசியஸ் “சூத்திரவாக்கியம்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் கதாநாயகனாக ஷைன் டாம் சாக்கோ நடித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு நடிகை வின்சி அலோசியஸ் ஒரு பேட்டியில் பேசியபோது, “ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது அத்திரைப்படத்தின் முன்னணி நடிகர் போதைப்பொருள் பயன்படுத்துவதை நேரடியாக பார்த்தேன். அவர் போதையில் என்னிடமும் இன்னொரு நடிகையிடமும் அத்துமீறி நடந்துகொண்டார்.

அதனால் அந்த படத்தில் இருந்து விலக முடிவு செய்தேன். ஆனால் இயக்குனரும் தயாரிப்பாளரும் என்னிடம் மன்னிப்பு கேட்டதால் வேறு வழியின்றி நடித்துக்கொடுத்தேன்” என குற்றம் சாட்டியிருந்தார். மேலும் அந்த நடிகை குறித்து கேரளா நடிகர் சங்கத்தில் புகாரும் அளித்திருந்தார். வின்சி அலோசியஸ் நடிகர் ஷைன் டாம் சாக்கோவை குறித்துதான் குற்றம் சாட்டியுள்ளார் என அந்த சமயத்தில் அரசல்புரசலாக தகவல் வெளிவந்தது.
பகிரங்க மன்னிப்பு
இந்த நிலையில் ஷைன் டாம் சாக்கோ, வின்சி அலோசியஸ் இணைந்து நடித்த “சூத்திரவாக்கியம்” திரைப்படம் வருகிற 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அந்த வகையில் இத்திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்ற நிலையில் இதில் ஷைன் டாம் சாக்கோ, வின்சி அலோசியஸ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர். அப்போது ஷைன் டாம் சாக்கோ அனைவரின் முன்னிலையிலும் வின்சி அலோசியஸிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். இச்சம்பவம் மலையாள சினிமா உலகின் கவனத்தை குவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடிகர் ஷைன் டாம் சாக்கோ போதை பொருள் விவகாரம் தொடர்பாக போலீஸாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.