உங்க சங்காத்தமே வேண்டாம்- ஆகாஷ் பாஸ்கரனுக்கு டாட்டா காட்டும் சிம்பு? அப்போ STR 49 நிலைமை?
Author: Prasad23 May 2025, 4:48 pm
டாஸ்மாக் முறைகேடு
டாஸ்மாக் முறைகேடு தொடர்பான விவகாரத்தில் திமுகவுக்கு நெருக்கமான பல பெரும்புள்ளிகளுடன் ஆகாஷ் பாஸ்கரனின் பெயரும் சிக்கியது. அதன்படி ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதில் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளதாக செய்திகள் தெரிவித்தன.

ஆகாஷ் பாஸ்கரன் தனது “Dawn Pictures” நிறுவனத்தின் மூலம் தனுஷை வைத்து “இட்லி கடை”, சிம்புவை வைத்து “STR 49”, சிவகார்த்திகேயனை வைத்து “பராசக்தி” ஆகிய மூன்று திரைப்படங்களை தயாரித்து வருகிறார். அதன் படி சிவகார்த்திகேயன், சிம்பு, தனுஷ் ஆகிய மூவருக்கும் ஆகாஷ் பாஸ்கரன் ரொக்கமாக பல கோடி ரூபாய் கொடுத்ததற்கான ஆவணங்கள் அமலாக்கத்துறையிடம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகிய மூவருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்ப வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உங்க சங்காத்தமே வேண்டாம்
அமலாக்கத்துறை வளையத்தில் ஆகாஷ் பாஸ்கரன் சிக்கியுள்ள நிலையில் அவர் தலைமறைவாகி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் “இட்லி கடை”, “பராசக்தி”, “STR 49” ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்பு நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிம்பு தனது 49 ஆவது திரைப்படத்தை வேறு தயாரிப்பு நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவெடுத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சிக்கியுள்ள ஆகாஷ் பாஸ்கரனால் தனது 49 ஆவது திரைப்படம் டேக் ஆஃப் ஆவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆதலால் வேறு தயாரிப்பாளரை அணுக சிம்பு முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
“STR 49” திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க சிம்பு, சந்தானம், கயாது லோஹர் ஆகியோர் இத்திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.