ஓடிடி தளங்களுக்கு ‘No’ சொன்ன ஆமிர்கான்? டிஜிட்டல் வியாபாரத்தையே புரட்டி போட்ட சம்பவம்!

Author: Prasad
30 July 2025, 2:01 pm

களைகட்டும் டிஜிட்டல் வியாபாரம்

சமீப காலமாக ஓடிடி நிறுவனங்கள் திரைப்படங்களின் விநியோகத்தில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களின் வெளியீட்டு தேதியை ஓடிடி நிறுவனமே முடிவு செய்வதாக கூறப்படுகிறது. அந்தளவிற்கு அதன் செல்வாக்கு பெருகியுள்ளது. 

இப்போதெல்லாம் ஒரு திரைப்படம் அறிவிக்கப்படுவதற்கு முன்பே அத்திரைப்படத்தை அமேசான், நெட்பிலிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களுக்கு விற்று தயாரிப்பாளர்கள் நல்ல லாபம் பார்த்துவிடுகிறார்கள். இவ்வாறு டிஜிட்டல் வியாபாரம் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகியுள்ளது. இந்த நிலையில்தான் நடிகர் ஆமிர்கான் தனது “சித்தாரே ஸமீன் பர்” திரைப்படத்தை எந்த ஓடிடி தளத்திற்கும் விற்காமல் யூட்யூப் தளத்தில் வெளியிடவுள்ளார். 

புதிய முயற்சி!

ஆமிர்கான் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 20 ஆம் தேதி வெளியான திரைப்படம் “சித்தாரே ஸமீன் பர்”. இத்திரைப்படம் அறிவுசார் சவால்களுக்கு உள்ளானவர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ஒன்றாகும். இத்திரைப்படத்தை ஆர் எஸ் பிரசன்னா இயக்கியிருந்த நிலையில் ஆமிர்கானே இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். 

ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இத்திரைப்படத்தை வாங்க பல ஓடிடி நிறுவனங்கள் முன் வந்துள்ளன. ஆனால் இத்திரைப்படத்தை  அனைத்து வர்க்க மக்களும் கண்டுகழிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இத்திரைப்படத்தை யூட்யூப் தளத்தில் வெளியிட ஆமிர்கான் முடிவு செய்துள்ளார். 

அதன் படி வருகிற ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி “சித்தாரே ஸமீன் பர்” திரைப்படம் யூட்யூப் தளத்தில் வெளியாகவுள்ளது. இந்தியாவில் ரூ.100 செலுத்தி இத்திரைப்படத்தை யூட்யூப் தளத்தில் காணலாம். அமெரிக்கா, கனடா, UK, ஜெர்மனி போன்ற பல நாடுகளில் அந்தந்த நாட்டிற்குரிய சந்தைக்கேற்ற விலையில் இத்திரைப்படம் காணக்கிடைக்கும். ஆமிர்கானின் இந்த புதிய முயற்சிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!