டிக்கிலோனா இயக்குநருடன் கூட்டணி சேரும் சிவகார்த்திகேயன்?

1 February 2021, 9:21 pm
Quick Share

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா படத்தின் இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது டாக்டர் மற்றும் அயலான் ஆகிய இரு படங்கள் உருவாகியுள்ளன. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், வினய், அர்ச்சனா, பிரியங்கா அருள் மோகன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் டாக்டர். அண்மையில், முடிக்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பைத் தொடர்ந்து, தற்போது டப்பிங் பணியையும் முடித்துக் கொடுத்துள்ளார். கோடை விடுமுறையை முன்னிட்டு இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அயலான் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இந்தப் படத்திற்கு இன்னும் 8 மாதங்கள் தேவைப்படுவதால், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அல்லது வரும் 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 19 ஆவது படமான டான் படத்தில் நடிக்கிறார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. டான் படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்தப் படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக டிக்கிலோனா பட இயக்குநர் கார்த்திக் யோகி படத்தில் நடிக்க இருப்பதாக புதிதாக தகவல் வெளியாகியுள்ளது. டிக்கிலோனா படத்தின் இயக்குநரின் கடின உழைப்பு மற்றும் அவர் பணியாற்றிய விதம் ஆகியவற்றைப் பார்த்து வியந்து போன தயாரிப்பாளர் காட்பாடி ஜே ராஜேஷ் மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கேஜே ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் காட்பாடி ஜே ராஜேஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள் என்பதால்,

அடுத்து தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிப்பார் என்று கூறப்படுகிறது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 0

0

0