பர்த்டேவுக்கு பிளான் போட்ட சிவகார்த்திகேயன்: டாக்டர் எப்போது வருவார்?

23 January 2021, 6:53 pm
Quick Share

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தின் டீசர் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். அனைவரிடத்திலும் நம்ம வீட்டுப்பிள்ளையாக திகழ்கிறார். கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ படம் வெளியானது. ஆனால், இந்தப் படம் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பு பெறவில்லை. இதனால், அடுத்தடுத்து படங்களில் அதிக கவனமுடன் நடித்து வருகிறார். தற்போது இவரது நடிப்பில் அயலான், டாக்டர் ஆகிய படங்கள் உருவாகி வந்தது.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் டாக்டர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி சிவகார்த்திகேயன் தனது 36ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிறந்தநாள் ட்ரீட் கொடுக்கும் வகையில் டாக்டர் படக்குழுவினர் டீசரை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாக்டரை படத்தை வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் அயலான். சைன்ஸ் பிக்‌ஷன் ஜானரில் உருவாகி வரும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும், இஷா கோபிகர், சரத் கேல்கர், யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா, பால சரவணன் ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை 24ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் மாதம் முதல் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் 23 ஆம் தேதி வரை அயலான் படத்தின் படப்பிடிப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடையும் என்று கூறப்படுகிறது. ஒரு வேளை படக்குழுவினர் ஓய்வு அறிவித்தால் இன்னும் 20 நாட்கள் நீடிக்கப்படும் என்று கூறப்படுகிறது.


அயலான் படத்தை வரும் ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர். ஆனால், கிராபிக்ஸ் பணிகளுக்கு கிட்டத்தட்ட 9 மாதங்கள் தேவைப்படுவதால், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும். அப்படியில்லை என்றால் வரும் 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

Views: - 6

0

0