ரியா சக்ரவர்த்தி தலைமறைவு..? பீகார் டிஜிபி பரபரப்பு அறிக்கை..! சுஷாந்த் சிங் மரண வழக்கில் புதிய திருப்பம்..!
5 August 2020, 6:11 pmபீகார் காவல்துறை டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே, சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ரியா சக்ரவர்த்தி தங்களுடன் தொடர்பு கொள்ளவில்லை என இன்று செய்தியாளர்களிடையே தெரிவித்தார்.
ரியா தலைமறைவாக உள்ளதாகவும், விசாரணைக்கு வரவில்லை என்றும் அவர் கூறினார். “மும்பை போலீசாருடன் கூட அவர் தொடர்பில் இருப்பது குறித்து எங்களிடம் எந்த தகவலும் இல்லை” என்று பாண்டே மேலும் கூறினார்.
ஜூன் 14’ம் தேதி மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள தனது குடியிருப்பில் இறந்து கிடந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தை, ஜூலை 25 ‘ம் தேதி பாட்னாவில் ரியா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக ரியா காணவில்லை என கூறப்படுகிறது. சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் தாக்கல் செய்த எஃப்.ஐ.ஆரில் தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் நள்ளிரவில் தனது கட்டிடத்தை விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே ஜூலை 31 அன்று, ரியாவின் ஒரு வீடியோ வெளிவந்தது. அதில் அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
பின்னர் சமூக ஊடகங்களில் வைரலாக இந்த வீடியோ க்ளிப்பில், “எனக்கு கடவுள் மீதும் நீதித்துறை மீதும் மிகுந்த நம்பிக்கை உள்ளது. எனக்கு நீதி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். மின்னணு ஊடகங்களில் என்னைப் பற்றி நிறைய பயங்கரமான விஷயங்கள் கூறப்பட்டிருந்தாலும், இந்த விவகாரத்தில் எனக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன். சத்யமேவ் ஜெயதே. உண்மை மேலோங்கும்.” என ரியா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.