வெளிநாட்டுக்கு படையெடுக்கும் வலிமை படக்குழு! எந்த நாடு?

18 January 2021, 2:07 pm
Quick Share


அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கு படக்குழுவினர் வெளிநாடு அதுவும் மொராக்கோ செல்ல இருக்கின்றனர்.


இயக்குநர் ஹெச் வினோத்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. போலீஸ் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அஜித்துக்கு ஜோடியாக ஹூமா குரேஸி நடிக்கிறார். மேலும், கார்த்திகேயா கும்மகோண்டா, பவல் நவகீதன், யோகி பாபு, குக் வித் கோமாளி ஃபேம் புகழ் ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.


போனி கபூர் இந்தப் படத்தை தயாரிக்கிறார். யுவன் சங்கர் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் வலிமை படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டுள்ளது. வலிமை படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கு சுவிட்சர்லாந்துக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர்.


ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டெல்லி அல்லது ராஜஸ்தானில் வலிமை படத்தின் ஆக்‌ஷன் காட்சியை படமாக்க இயக்குநர் ஹெச் வினோத் திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில், தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, வட ஆப்பிரிக்காவில் உள்ள மொராக்கோவிற்கு வலிமை படக்குழுவினர் செல்ல இருக்கின்றனர். அங்கு மீதமுள்ள அனைத்து காட்சிகளையும் படமாக்குவதோடு வலிமை படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் மொரோக்காவோடு முடிவடைகிறது. வரும் பிப்ரவரிக்குள் வலிமை படத்தை முடித்துவிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.


இதையடுத்து, வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில், வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தல ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதற்கிடையில், தற்போது ஓய்வில் இருக்கும் தல அஜித் பைக் ரைடில் சிக்கிம் சென்றுள்ளார். வாரணாசியில் ஒரு உணவகத்தில் அஜித் சாப்பிட்ட போது எடுத்த புகைப்படம் தான் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. சென்னையிலிருந்து சிக்கிம் செல்வதற்கு 4500 கிமீ தொலைவு ஆகும். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தல அஜித் தனது பைக்கிலேயே சிக்கிம் சென்றுள்ளார். சிக்கிம் சென்று பின்னர் ஓரிரு நாட்களுக்குப் பிறகு அஜித், சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 0

0

0