தளபதி 66 : மீண்டும் மாஸ்டர் கூட்டணியா?

15 January 2021, 7:18 pm
Quick Share

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிகில் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள படம் மாஸ்டர். கடந்த 13 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்துள்ளது. இந்தப் படத்தை கார்த்தியின் கைதி படத்தை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் விஜய் உடன் இணைந்து விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், சாந்தணு, பிரிகிதா, கௌரி கிஷா, ரம்யா சுப்பிரமணியன், சஞ்சீவ், ஸ்ரீமன், தீனா, பூவையார் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளன.

கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பிறகு திரைக்கு வந்த இந்தப் படத்திற்கு திரையரங்குகளில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு. தமிழகத்தில் மட்டும் 2 நாட்களில் ரூ.65 கோடி வரையில் வசூல் அளித்துள்ளது. இதுதவிர மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் மாஸ்டர் வெளியாகி வெற்றி வாகை சூடியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாஸ்டர் படம் திரைக்கு வந்துள்ள நிலையில், மாஸ்டர் படப்பிடிப்பின் போது மாஸ்டர் படக்குழுவினர் பொங்கல் கொண்டாடிய வீடியோவை தயாரிப்பு நிறுவனம் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இதில், தளபதி விஜய் வேஷ்டி சட்டையுடன் பொங்கல் பொங்கல் கொண்டாடியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் தளபதி65 (T65) படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் என்று ஏற்கனவே வந்த அறிவிப்புதான். இதைத் தொடர்ந்து நடிகை பூஜா ஹெக்டே இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகிறார் என்று கூறப்படுகிறது.

அதோடு, ஜானி மாஸ்டர் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் தொடங்கப்பட இருக்கும் இந்தப் படத்தை வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில், தளபதி65 படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்க இருக்கும் தளபதி66 படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் லலீத் குமார், இந்தப் படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் – விஜய் ஆகிய இருவரும் மீண்டும் இணைவது தளபதி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது

Views: - 0

0

0