எதன் அடிப்படையில் விருது வழங்கப்படுகிறது? தேசிய விருது கமிட்டியை கண்டபடி கேட்ட ஊர்வசி!
Author: Prasad4 August 2025, 4:39 pm
சிறந்த துணை நடிகை விருது
சமீபத்தில் 71 ஆவது தேசிய விருதுகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருது “பார்க்கிங்” திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது. அது மட்டுமல்லாது இப்படியலில் சிறந்த நடிகருக்கான விருது “ஜவான்” படத்திற்கு ஷாருக்கானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இப்பட்டியலில், சிறந்த துணை நடிகைக்கான விருது “உல்லொலுக்கு” என்ற திரைப்படத்திற்காக ஊர்வசிக்கும் “Vash” திரைப்படத்திற்காக ஜானகி போடிவாலா என்பவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது குறித்து ஒரு பேட்டியில் பேசிய ஊர்வசி, தனது கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

எதன் அடிப்படையில் இந்த விருது?
“எனக்கு எதன் அடிப்படையில் சிறந்த நடிகைக்கான பிரிவில் அல்லாமல் சிறந்த துணை நடிகை என்ற பிரிவின் கீழ் விருது கொடுக்கிறார்கள்? நடிப்புக்கென்று ஏதாவது நிலையான அளவுகோல் உண்டா என்ன? அல்லது குறிப்பிட்ட வயதை தாண்டிவிட்டால் இதுதான் நமக்கு கிடைக்குமா?
இந்த விருதுகள் விருது பெறுபவரை பெறுமை படுத்தவேண்டும், ஆனால் அது அல்லாமல் எந்த விளக்கமும் இல்லாமல் வழங்கப்படுகிறது. அமைதியாக வாங்கிக்கொள்ள இது ஓய்வூதிய பணம் அல்ல. இந்த முடிவுகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன? என்ன அளவுகோள்கள் பின்பற்றப்படுகின்றன?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
2006 ஆம் ஆண்டு ஊர்வசி, “அச்சுவின்டே அம்மா” என்ற படத்திற்கு சிறந்த துணை நடிகைக்கான விருதை பெற்றார். இது குறித்து பேசிய அவர், “அந்த சமயத்திலும் கூட விருது வழங்குவதில் அரசியல் இருந்தது. ஆனால் லாபி செய்வதை விட அர்த்தமுள்ள சினிமாவை மட்டுமே உருவாக்க முயன்றேன்” என்றும் கூறியிருந்தார். ஊர்வசி இவ்வாறு பேட்டியளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
