ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்த பாடலை ரிஜெக்ட் செய்த விஜய்? இப்படி எல்லாம் நடந்துருக்கா?
Author: Prasad29 August 2025, 5:18 pm
எல்லா புகழும் இறைவனுக்கே…
விஜய், ஷ்ரேயா ஆகியோரின் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “அழகிய தமிழ் மகன்”. இத்திரைப்படத்தை பரதன் இயக்கியிருந்தார். ஏ ஆர் ரஹ்மான் இத்திரைப்படத்திற்கு இசைமைத்திருந்த நிலையில் ஸ்வர்கசித்ரா அப்பச்சன் என்பவர் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே” என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது. இதில் விஜய்யின் நடனமும் அசரவைக்கும் வகையில் அமைந்திருந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட “அழகிய தமிழ் மகன்” திரைப்படத்தின் தயாரிப்பாளர் அப்பச்சன் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்த பாடல் விஜய்க்கு பிடிக்காமல் போனது குறித்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

ரஹ்மான் பாடலை ரிஜெக்ட் செய்த விஜய்
“படத்தின் இன்ட்ரோ பாடலை கேட்கவேண்டும் என விஜய் ஆவலோடு இருந்தார். ஏ ஆர் ரஹ்மான் என்னிடம் மட்டும்தான் பேசுவார். உதவியாளர் யாருடனும் பேசமாட்டார். இயக்குனர் பரதனிடம் கூட பேசமாட்டார். நான் பாடலை எடுத்துக்கொண்டு விஜய்யின் வீட்டிற்கு சென்றேன். விஜய் தனது காரில் அப்பாடலை கேட்டார். விஜய்க்கு அப்பாடல் பிடிக்கவில்லை.
அது ஒரு மெதுவான பாடலாக இருந்தது. விஜய் ஒரு டப்பாங்குத்து பாட்டை எதிர்பார்த்தார். அப்பாடல் ஒரு நல்ல பாடல்தான். ஆனால் விஜய்க்கு பிடிக்கவில்லை. ஆதலால் பாடலை மாற்றிவிடலாம் என கூறினேன். ஏ ஆர் ரஹ்மானிடம் சென்று யாரும் இதுவரை பாடல் நன்றாக இல்லை மாற்றித்தாருங்கள் என கூறியது இல்லை. ஆனால் நான் ரஹ்மானிடம் கேட்டுப் பார்ப்பதாக சொன்னேன்.
நான் எனது காரை எடுத்துக்கொண்டு நேராக ரஹ்மான் ஸ்டூடியோவிற்கு போனேன். அங்கே ரஹ்மானின் மேனேஜர் சுவாமியிடம், ‘விஜய்க்கு பாடல் பிடிக்கவில்லை’ என கூறினேன். ‘ரஹ்மான் சார் என்றைக்கும் பாடலை மாற்றியமைத்து கொடுக்கமாட்டார்’ என சுவாமி கூறினார். அப்படியும் நான் கேட்டுப்பார்க்கலாம் என்று சொன்னேன்.
சுவாமி இதனை ரஹ்மானிடம் கூற, ரஹ்மான் என்னை ஸ்டூடியோவிற்குள் அழைத்தார். என்ன விஷயம்? என ரஹ்மான் கேட்டார். அதற்கு நான் ‘ஹீரோவுக்கு பாட்டு பிடிக்கவில்லையாம்’ என கூறினேன். “ஹீரோவுக்கு பிடிக்கவில்லையா இல்லை உங்களுக்கு பிடிக்கவில்லையா?” என கேட்டார்.

நான் ‘எனக்கும் பிடிக்கவில்லை’ என சொல்லிவிட்டேன். ‘உங்களுக்கும் பிடிக்கவில்லையா?’ என கேட்டார்.. ‘டப்பாங்குத்து போல் வேண்டும்’ என சொன்னேன். ‘டப்பாங்குத்து எல்லாம் போட்டுத்தர முடியாது என்று சொன்னார். ‘மாற்றித்தாருங்கள்’ என கேட்டேன். அதற்கு அவர், ‘மாற்றித்தரவேண்டுமா?’ என கேட்டார். அதற்கு மேல் நான் மௌனமாகிவிட்டேன்.
அதன் பின் அவர் கவிஞர் வாலிக்கு ஃபோன் செய்து நிலைமையை சொன்னார். வாலி சார் ஒரு பாடல் எழுதுவதற்கு ஒரு லட்சம் சம்பளம் கேட்பார். நானும் இயக்குனரும் வாலியை பார்க்க சென்றோம். இயக்குனர் வாலியிடம் பாடலின் சிட்சுவேஷனை சொன்னார். அதன் பின் நான் அவருக்கு ஒரு லட்சம் பணம் கொடுத்துவிட்டு திரும்பி வந்துவிட்டேன்.
அதன் பின் ஒரு நாள் ரஹ்மான் சார் எனக்கு ஃபோன் செய்து வரச்சொன்னார். ‘நீங்கள் மட்டும் வாருங்கள். வேறு யாரையும் உடன் அழைத்து வரவேண்டாம்’ என்று சொன்னார். அதன் படி நான் மட்டும் சென்றேன். ‘எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே’ பாடலை போட்டுக்காட்டினார். ரஹ்மானே அதனை பாடியிருந்தார். எனக்கு மிகவும் பிடித்துப்போனது. நான் சிடியை எடுத்துக்கொண்டு பரதனையும் அழைத்துக்கொண்டு விஜய் வீட்டிற்குச் சென்றேன்.
விஜய் தனது காரில் அதனை போட்டு கேட்டார். பாடலை கேட்டுவிட்டு விஜய்க்கு கண்ணீர் வந்துவிட்டது. ரஹ்மானின் மேனேஜர் சுவாமியிடம் விஜய்க்கு பாடல் பிடித்துவிட்டது என கூறினேன். ரஹ்மான் எனக்காகதான் பாடலை மாற்றித்தந்தார். எனக்கு பாடல் பிடிக்கவில்லை என்று கூறியதால்தான் மாற்றித்தந்தார். ஹீரோக்கு பிடிக்கவில்லை என்று சொன்னால் மாற்றியெல்லாம் தரமாட்டார். அவர் அப்படிப்பட்ட டைப்” என “எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே” என்ற ஹிட் பாடல் உருவானது குறித்த சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
