இது என்ன புதுசா இருக்கே: சூரிக்கு அப்பாவாக நடிக்கும் விஜய் சேதுபதி!

31 January 2021, 8:14 pm
Quick Share

சூரி நடிக்கும் புதிய படத்தில், அவருக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் கவுண்டமனி, செந்தில், விவேக், வடிவேலு, சந்தானம் ஆகியோருக்கு அடுத்த வரிசையில் நகைச்சுவையில் கலக்கி வருபவர் நடிகர் சூரி. கடந்த 1997 ஆம் ஆண்டு திரைக்கு வந்த தளபதி விஜய் நடித்த காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். ஆனால், அவரது கதாபாத்திரம் ஒன்று பெரிதாக தெரியவில்லை. இதே போன்று மறுமலர்ச்சி, சங்கமம், ஜேம்ஸ் பாண்டு, உள்ளம் கொள்ளை போகுதே, ரெட், வின்னர் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

ஆனால், கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை. அப்போதுதான் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் வந்த வெண்ணிலா கபடிக்குழு படம் அவருக்கு கை கொடுத்தது. இந்தப் படத்தில் ஒரு கபடி விளையாட்டு வீரராக சூரி நடித்திருந்தார். ஆனால், அது அவருக்கு பெயர் கொடுக்கவில்லை. 50 புரோட்டா சாப்பிடும் போட்டியில், கலந்து கொண்டு வெற்றி பெற்றது தான் அவருக்கு புரோட்டா சூரி என்று பெயர் கொடுத்தது. அதன் பிறகு பட வாய்ப்பும் குவிந்தது. சிம்பு, விஜய், கார்த்தி, விஷால், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, விக்ரம் என்று மாஸ் நடிகர்கள் உடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த சூரி, நடிகர் சந்தானத்தைப் போன்று ஹீரோ அவதாரமும் எடுத்துள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சூரி ஹீரோவாக நடிக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இந்தப் படம் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிகை பவானி ஸ்ரீ நடிக்கிறார். ஏற்கனவே இந்தப் படத்தில் சூரியுடன் இணைந்து விஜய் சேதுபதியும் நடிக்கிறார் என்று தகவல் வெளியானது.

இந்த நிலையில், சூரிக்கு அப்பா கதாபாத்திரத்தில் தான் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக கூறப்படுகிறது. முதலில் சூரிக்கு அப்பாவாக இயக்குநர் பாரதிராஜா நடிப்பதாக இருந்தது. ஆனால், அவர் படத்திலிருந்து விலகியதைத் தொடர்ந்து, விஜய் சேதுபதி அப்பா கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக சீதக்காதி, ஆரஞ்சு மிட்டாய் ஆகிய படங்களில் விஜய் சேதுபதி வயதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 1

0

0