இந்த காலத்திலும் இப்படி ஒரு சாமி படமா? கண்ணப்பா படத்துக்கு கிடைத்த எதிர்பாராத ரெஸ்பான்ஸ்!

Author: Prasad
27 June 2025, 6:12 pm

வெளியானது கண்ணப்பா…

முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்ணு மஞ்சுவின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் “கண்ணப்பா”. இத்திரைப்படத்தின் கதையை விஷ்ணு மஞ்சுவே எழுதியுள்ளார். இதில் விஷ்ணு மஞ்சுவுக்கு ஜோடியாக பிரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் சரத்குமார், மதுபாலா, மோகன் பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

vishnu manchu starring Kannappa movie full review

இத்திரைப்படத்திற்கு ஸ்டீஃபன் தேவசி இசையமைத்துள்ளார். ஷெல்டன் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் மோகன் லால், அக்சய் குமார், காஜல் அகர்வால், பிரபாஸ் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். தெலுங்கில் உருவான இத்திரைப்படம் தமிழ், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில் வெளியாகியுள்ளது. 

கண்ணப்பாவின் கதை 

இந்து புராணத்தின் மிகப் பிரபலமான கதையான கண்ணப்ப நாயனாரின் விரிவான முன் கதையை மையமாக வைத்து “கண்ணப்பா” திரைப்படம் உருவாகியுள்ளது.  2 ஆம் நூற்றாண்டில் உடுமூரில் வாழும் திண்ணன் என்பவன் து சிறு வயதில் இருக்கும்போது அவனது நண்பனை காளி தேவதைக்கு நரபலி கொடுக்கின்றனர். அதனை பார்த்து விரக்தியடையும் திண்ணன் நாத்திகனாக மாறிவிடுகிறான். அதன் பின் நாத்திகனாகவும் வளர்கிறான்.

உடுமூரின் காட்டுப்பகுதியில் மொத்தம் 5 குடிகள் உள்ளன. அந்த 5 குடிகளில் ஒரு குடியை சேர்ந்த தலைவரின் மகன்தான் திண்ணன். திண்ணன் ஒரு மகாவீரனாக இருக்கிறான். திண்ணனின் குடி இருக்கும் பகுதியில் வாயு லிங்கம் இருக்கிறது. இந்த வாயு லிங்கம் மற்றவர்கள் கண்களில் படாதவாறு அந்த லிங்கத்திற்கு பூஜை செய்து வருகிறார் மகாதேவ சாஸ்திரிகள் என்பவர். இந்த வாயு லிங்கத்தை காளா முகி என்பவன் அபகரிக்க நினைக்கிறான். அதற்காக தனது ஆட்களை அனுப்பும்போது திண்ணனின் குடியில் உள்ள பெண்களை அவனது ஆட்கள் தொந்தரவு செய்கிறார்கள். அவர்களை திண்ணன் கொன்றுவிடுகிறான். 

இதனால் கோபமடைந்த காளா முகி திண்ணனின் குடியை தாக்க தனது படையை அனுப்புகிறான். காளா முகியின் படையை எதிர்க்க 5 குடிகளும் ஒன்றாக இணைகிறது. அந்த சமயத்தில் ஒருவன் திண்ணனின் காதலியான நெமலியை திருமணம் செய்துகொள்ள விருப்பப்படுகிறான். அப்போது அவனை தாக்குகிறான் திண்ணன். இதனால் கோபப்படும் திண்ணனின் தந்தை அவனை ஊரை விட்டே விரட்டிவிடுகிறார். 

திண்ணன் வெளியேறிய பிறகு காளா முகியின் படை திண்ணனின் குடியை தாக்க, திண்ணனின் தந்தை இறந்துபோகிறார். இதனை தொடர்ந்து தந்தையின் கொலைக்கு பழிவாங்க நினைக்கிறான் திண்ணன். காளா முகியை திண்ணன் அளித்தானா? நாத்திகம் பேசி வந்த திண்ணன் இறுதியில் எப்படி கண்ணப்பர் ஆனார் என்பதுதான் இத்திரைப்படத்தின் கதை. 

vishnu manchu starring Kannappa movie full review

படத்தின் பிளஸ்

படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கின்றனர். திண்ணன் கதாபாத்திரத்தில் நடித்த கதாநாயகன் விஷ்ணு மஞ்சு கண்ணப்பராக வாழ்ந்திருக்கிறார். அவரது நடிப்பு மிகவும் அபாரம். கதாநாயகியாக வரும் பிரீத்தி முகுந்தன் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். இருவருக்கும் இடையே இடம்பெறும் காதல் காட்சிகள் சலிப்புத் தட்டாமல் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

விஷ்ணு மஞ்சுவின் தந்தையாக வரும் சரத்குமார் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதில் சிவனாக வரும் அக்சய் குமார் இடம்பெறும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. சிவன் குறித்த காட்சிகள் அனைத்துமே கூஸ்பம்ப்ஸ் ஆக இருக்கிறது. ரசிகர்களுக்கு தெய்வீக உணர்வை தருகிறது. பிரபாஸ் இடம்பெறும் காட்சியில் படம் சூடுபிடிக்கிறது. படத்தின் முதல் பாதி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. 

ஷெல்டனின் ஒளிப்பதிவு படத்தின் கூடுதல் பலம். ஸ்டீஃப தேவசியின் பாடல்கள் கேட்கும்படி இருந்தாலும் பின்னணி இசையில் மாஸ் காட்டிவிட்டார்.

படத்தின் மைன்ஸ்

இரண்டாம் பாதி தொடங்கியதில் இருந்து பிரபாஸ் வரும் வரை திரைக்கதையில் சற்று தொய்வு தெரிகிறது. மோகன் லால் இடம்பெறும் காட்சிகளும் அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை. மற்றபடி படம் மிகவும் ரசிக்கும் வகையிலேயே இருக்கிறது. எதிர்பார்த்ததை விட ஒரு படி மேல் என்றே சொல்லலாம். 

குறிப்பாக இறைவனின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை உணர்த்தும் கண்ணப்பரின் கதையை திரைப்படமாக உருவாக்கியதற்கே படக்குழுவை பாராட்ட வேண்டும். சில காட்சிகளை தவிர படம் ரசிக்கும்படியாகவே அமைந்திருக்கிறது. நிச்சயம் பார்க்கலாம். 

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!
  • Leave a Reply