5 மாநில தேர்தல் படுதோல்வி தமிழகத்தில் எதிரொலிக்கிறதா…? உஷாராகும் திமுக… கிலியில் தமிழக காங்கிரஸ்…!!!

Author: Babu Lakshmanan
10 March 2022, 6:41 pm
Quick Share

5 மாநில தேர்தல்

அண்மையில் உத்தர பிரதேசம் உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா என
5 மாநிலங்களில் நடந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது, உத்தரபிரதேசத்தின் முடிவுகள்தான். ஏனென்றால் நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலம் என்பதோடு மட்டுமல்லாமல் அது 80 நாடாளுமன்ற தொகுதிகளையும் கொண்டது.

5 State Election - Updatenews360

உபியில் ஆட்சியைக் கைப்பற்றும் கட்சிதான் நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும் அல்லது ஆட்சியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றும் என்பது எதிர்க்கட்சிகளின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

அதிலும் குறிப்பாக அந்த மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சி தலைவரான அகிலேஷ் யாதவிடம் இந்த சென்டிமென்ட் அதிகம்.

விரும்பாத எதிர்கட்சிகள்

2017 சட்டப்பேரவைத் தேர்தலில் மாநிலத்திலுள்ள 403 தொகுதிகளில் பாஜக மட்டும் 302 தொகுதிகளை கைப்பற்றி மகத்தான சாதனை படைத்தது. அதன்பிறகு 2019-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் உபியில் மட்டும் பாஜக 64 தொகுதிகளில் வெற்றி பெற்றது. நாடு முழுவதும் 303 இடங்களை பாஜக கைப்பற்றினாலும் இதில் உபியின் பங்களிப்பு அதிகம்.

அதனால்தான், உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதை காங்கிரஸ், சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஒய் எஸ் ஆர் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிர சமிதி, தேசிய மாநாட்டு கட்சி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எந்த எதிர்க்கட்சியும் விரும்பவில்லை என்பது வெளிப்படை.

இதனாலேயே மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு சமாஜ்வாடிக்கு ஆதரவாகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் தீவிர பிரச்சாரம் செய்தார்.

இதேபோல் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் சார்பில் ராகுலும், பிரியங்காவும் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அனல் பறக்க பிரச்சாரம் மேற்கொண்டனர்.

திருமா பேச்சு

தமிழகத்தில் கூட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அண்மையில் பேசும்போது “உத்தரப் பிரதேசத்தில் பாஜக தப்பி தவறி ஆட்சியைப் பிடித்துவிட்டால் அது அந்த மாநிலத்துக்கு மட்டுமல்ல நாட்டுக்கே கேடுதான் விளையும். ஆபத்தும் உருவாகும்” என்று ஆவேசமாக விமர்சித்து இருந்தார்.

ஆனாலும் அத்தனை எதிர்க்கட்சிகளின் ஆசையும் பணால் ஆகிவிட்டது.

சாதனை படைத்த பாஜக

உபியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்து இருப்பதன் மூலம் 18 எதிர்க்கட்சிகளின் கனவையும் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜகவின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா, உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நால்வரும் தகர்த்தெறிந்துள்ளனர்.

மேலும் மாநிலத்தில் 1985-ம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ந்து அடுத்தடுத்த தேர்தல்களில் வென்று இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றிய சாதனையையும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச பாஜக படைத்துள்ளது.

Yogi_Adityanath_UpdateNews360

சமாஜ்வாதிக்கு திரும்பிய ஓட்டு

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு கிடைக்கவேண்டிய ஓட்டுகள் பெருமளவில் சமாஜ்வாடிக்கு திரும்பியுள்ளன. கடந்த தேர்தலில் அக்கட்சிக்கு கிடைத்த 22 சதவீத ஓட்டுகள் இந்த தேர்தலில் 12 சதவீதமாக குறைந்து போனது.

அதேபோல காங்கிரசுக்கு வாக்களிப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை என்ற மக்களின் எண்ணமும் இம்முறை சமாஜ்வாடி வென்ற இடங்களை இரண்டரை மடங்கு அதிகமாக்கி இருக்கிறது. 2017 தேர்தலில் 6.4 சதவீத ஓட்டு வாங்கிய காங்கிரஸ் 2.4 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்று தற்போது சிறிய மாநில கட்சி லெவலுக்கு சுருங்கிப் போயுள்ளது.

கடந்த தேர்தலில் 21 சதவீத வாக்குகள் வாங்கிய சமாஜ்வாடி இம்முறை 32 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளதற்கு இதுதான் முக்கிய காரணம்.

காங்கிரசுக்கு சறுக்கல்

உத்தரபிரதேசத்திலும், பஞ்சாபிலும் காங்கிரஸ் படுதோல்வி கண்டிருப்பது தேசிய அளவில் அதன் செல்வாக்கு முற்றிலும் சரிந்து இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அதுவும் பஞ்சாபில் மாநில காங்கிரஸ் தலைவர் சித்துவின் பேச்சைக்கேட்டு ராகுலும், பிரியங்காவும் அப்படியே நடந்துகொண்டதால் அங்கு ஆம் ஆத்மியிடம் ஆளும் கட்சியான காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்து இருக்கிறது.

rahul - priyanka - updatenews360

உத்தரகாண்ட், மணிப்பூர்,கோவா மாநிலங்களிலும் சொல்லிக் கொள்கிற மாதிரி
காங்கிரசுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்பதால் அதுவும் தேசிய அளவில் நிச்சயம் எதிரொலிக்கும். இது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமையும் வாய்ப்பும் உள்ளது.

மம்தா தீவிரம்

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் இல்லாத ஒரு அணியை உருவாக்குவதில் கடந்த ஜூலை மாதம் முதல் மம்தா பானர்ஜி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பிரதமர் மோடியை எதிர்த்து போராடும் திராணி ராகுலுக்கு இல்லை என்று வெளிப்படையாக விமர்சிக்கவும் செய்தார்.

ஆனால் மம்தாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கிடையே தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ், தேசிய அளவில் புதிய அணியை உருவாக்குவது தொடர்பான முயற்சிகளை முன்னெடுத்தார். அதுவும் அவ்வளவாக எடுபடவில்லை.

Mamata 5 Lakhs - Updatenews360

இதனால் 5 மாநில தேர்தல் முடிவுக்குப் பிறகு தேசிய அளவில் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் யாரை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவது என தீர்மானிக்கலாம் என்று பிரச்சனையை சில மாதங்கள் கிடப்பில் போட்டனர்.

இப்போது தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. பஞ்சாபில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மியிடம் காங்கிரஸ் படுதோல்வி கண்டுள்ளது. உபியிலும் முந்தைய தேர்தலை விட காங்கிரஸ் கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் இனி காங்கிரஸ் தலைமையில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவது சந்தேகம்தான்.

தமிழக காங்., நிலை

இதுகுறித்து டெல்லியில் மூத்த அரசியல் விமர்சகர்கள் சிலர் கூறும்போது,
“தேசிய அளவில் காங்கிரஸ் செல்வாக்கை பெரிதும் இழந்து உள்ளதால் இனி மற்ற கட்சிகள் கூறும் யோசனையை கேட்டு நடக்க வேண்டிய நிலைக்கு சோனியாவும் ராகுலும் தள்ளப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்ல, பஞ்சாபில் காங்கிரசை வீழ்த்தியதால் நாங்கள்தான் தேசிய அளவில் பெரிய கட்சியாக வளர்ந்து வருகிறோம் என்று ஆம் ஆத்மி இனி சொல்ல ஆரம்பிக்கும்.

Stalin_KSAlagiri - updatenews360

பஞ்சாபில் தங்களை வீழ்த்தியதால் அந்தக் கட்சியுடன் எதிர் காலத்தில் கூட்டணி அமைக்க காங்கிரசும் விரும்பாது. தமிழகத்தில் திமுக ஒதுக்கும் தொகுதிகளை மட்டுமே பெற்றுக் கொள்ளும் நிலையும் ஏற்பட்டுள்ளது. 2024 தேர்தலில் காங்கிரசுக்கு தமிழகத்தில் திமுக 5 இடங்களை ஒதுக்கினாலே பெரிய விஷயமாக பேசப்படும்.

இதேபோல் சமாஜ்வாடியுடன் கூட்டணி வைத்தாலும், காங்கிரசுக்கு அக்கட்சி இரண்டு தொகுதிகளை கொடுத்தாலே ஆச்சரியமானதாக இருக்கும்.

பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தாலும் கூட செல்வாக்கு இல்லாத காங்கிரசுக்கு அக்கட்சி 5 இடங்களுக்கும் குறைவாகத்தான் ஒதுக்கும். மராட்டிய மாநிலத்திலும் இதேநிலை காங்கிரசுக்கு ஏற்படலாம். 5 மாநில தேர்தல் தோல்வி காரணமாக காங்கிரஸ் தலைமையால் பேரம் பேசி அதிக தொகுதிகளை கேட்டு வாங்கவும் முடியாது.

பாஜகவுடன் நேரடியாக மோதும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா மாநிலங்களில் மட்டுமே தங்கள் கட்சி விரும்பும் அளவிற்கு தொகுதிகளில் காங்கிரசால் போட்டியிட முடியும். இந்த மாநிலங்களில் என்னதான் அக்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அமைந்தாலும் கூட அக்கட்சியால் 2024 தேர்தலில் 50 இடங்களுக்கு மேல் வெற்றி பெற முடியுமா? என்பது கேள்விக்குறிதான்.

வலிமையான எதிரி..?

இந்தத் தேர்தல் முடிவுகளை வைத்து பார்க்கும்போது காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க ஆர்வம் காட்டாது. இதுபோன்ற நிலையில் பிரதமர் வேட்பாளருக்கு தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலினை காங்கிரஸ் மேலிடம் நிறுத்துவதற்கு முயற்சிக்கலாம். ஆனால் பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டு மாநிலத்தில் செல்வாக்கை இழந்து விடக்கூடாது என்கிற எண்ணம் திமுக தலைமைக்கு தோன்றும்.

அதேநேரம் உபியில் பாஜக அபார வெற்றி கண்டிருப்பதால் தமிழகத்தில் பிரதமர் மோடி மீது திமுகவினரும் அதன் கூட்டணி கட்சியினரும் சில குறிப்பிட்ட ஊடகங்களும் கட்டமைத்து வரும் போலியான பிம்பத்தை தகர்ப்பதில் மாநில பாஜக தீவிரமாக ஈடுபடும் என்று எதிர்பார்க்கலாம்.

modi sonia - updatenews360

மாநிலத் தேர்தல் முடிவுகள் நாடாளுமன்றத் தேர்தலுடன் பொருந்திப்போகுமா? என்ற கேள்வி எழலாம். ஆனால் எதிர்க் கட்சிகள் ஒருங்கிணைந்து பிரதமர் வேட்பாளரை நிறுத்தாத வரை அது பாஜகவுக்கு பெரிய ப்ளஸ் பாயிண்ட் தான். ஏனென்றால் தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக வலிமை கொண்ட கட்சி இப்போதைக்கு எதுவுமில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

தவிர எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் நிலைகுலைந்து போயுள்ளன” என்று அந்த அரசியல் விமர்சகர்கள்
தற்போதைய எதார்த்த நிலையை குறிப்பிட்டனர்.

Views: - 568

0

0