ஆண் குழந்தை ₹7 லட்சம், பெண் குழந்தை ₹5 லட்சம்.. காக்கிச் சட்டைக்கு கேட்ட அழுகுரல்.. விசாரணையில் சிக்கிய நெட்வொர்க்!

Author: Udayachandran RadhaKrishnan
21 August 2024, 11:19 am

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பாண்டு ரங்காபுரம் துறைமுக பூங்கா அருகே 5 மாத பெண் குழந்தையை விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சோதனை நடத்தினர்.

அப்போது விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த குழந்தையுடன் 9 பேரை ஆகஸ்ட் 11ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் பின்னனி குறித்து விசாரணையில், மேலும் சில தகவல்கள் கிடைத்தன.

அந்த தகவலின் அடிப்படையில் விசாகப்பட்டினம் போலீஸ் கமிஷனர் சங்கபிரதா பாக்சி தனிப்படை அமைத்தார். இதனையடுத்து குழந்தைகளை விற்கும் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்த கஜுவாகாவைச் சேர்ந்த மல்லிகார்ஜுனா என்பவரை குழந்தைகள் வாங்கி கொள்ள தேவை என போலீஸார் தொடர்பு கொண்டனர். இதையடுத்து, 15 மாத பெண் குழந்தையை விற்பனைக்கு கொண்டு வந்தபோது போலீசார் அவரை கைது செய்தனர்.

மல்லிகார்ஜுனாவிடம் நடத்திய விசாரணையில், கடப்பாவை சேர்ந்த 2 பேர், டெல்லியை சேர்ந்த ஒருவர் இணைந்து ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி, ஒடிசா ஆகிய மாநிலங்களில் குழந்தைகளை விற்பது தெரியவந்தது. இந்த குழந்தை கடத்தல் நாடு முழுவதும் பெரும் நெட்வொர்க் வைத்துக்கொண்டு செயல்படுவதால் அதன் அழமான வேர்களை கண்டறிய கூடுதல் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு விசாகப்பட்டினம் போலீசார் மூன்று குழுக்களை அமைத்து அனகாபல்லி மாவட்டம் மார்தூரில் மற்றொரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.இதில் விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 10 மாத ஆண் குழந்தையும், சீமலப்பள்ளியில் அறுவை சிகிச்சையில் மூன்று வயது பெண் குழந்தையும், பெடனாரவயில் பிறந்து 20 நாட்களே ஆன பெண் குழந்தையும் மீட்கப்பட்டன.

இவர்களிடம் நடத்திய விசாரனையில் ஒடிசா மாநிலம் ஜெய்ப்பூரில் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த ஒன்பது மாத ஆண் குழந்தை மற்றும் இருவரை போலீசார் கைது செய்தனர். குழந்தைகளை விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்புடைய 17 பேரை தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு குழந்தையும் ₹ 5 லட்சம் முதல் ₹.7 லட்சம் வரை விற்கப்படுவது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தக் கும்பலின் வேர்கள் வேறு சில மாநிலங்களுக்கும் பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களை அடையாளம் காண அந்தந்த மாநிலங்களுக்கு சிறப்புக் குழுக்கள் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதால் விரைவில் மேலும் சில குழந்தைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது .

இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளை விசாரித்தால் மேலும் சில தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது எனவே தொடர் விசாரனையில் இருப்பதாகவும் சம்மந்தப்பட்ட மாநில போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் உதவியும் நாடி வருகின்றனர்.

குழந்தை கடத்தலுக்கு சில மருத்துவமனைகளில் சரியான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளாதது கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாத மருத்துவமனைகள் மீது தொடர்ந்து நோட்டீஸ் வழங்கி பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகள் யாருடைய குழந்தைகள் எங்கிருந்து எடுத்துவரப்பட்டது என்பது விசாரணைக்கு பிறகு சம்பந்தப்பட்ட பெற்றோர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் அதுவரை அரசு காப்பகத்தில் வைத்து பராமரிக்கப்படும் என விசாகப்பட்டினம் போலீஸ் கமிஷனர் சங்கபிரதா பாக்சி தெரிவித்தார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?