இண்டியா கூட்டணிக்கு ஆப்பு வைக்கும் ஆம் ஆத்மி…காங்கிரஸ் கட்சிக்கு எதிராக காய் நகர்த்திய கெஜ்ரிவால்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 October 2023, 11:48 am

இண்டியா கூட்டணியை ஆட வைத்த ஆம் ஆத்மி…காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வேட்பாளர்களை அறிவித்த கெஜ்ரிவால்!!

மத்தியில் உள்ள பாஜகவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு கூட்டணி அமைத்தனர். அதற்கு இண்டியா கூட்டணி என பெயர் வைத்துள்ளனர். இண்டியா கூட்டணி அமைத்து நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிராக வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

இண்டியா கூட்டணியில் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், சிவசேன உத்தவ் தாக்கரே அணி, தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் அணி, திமுக, ஆம் ஆத்மி, விசிக என 25க்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன.

இந்த நிலையில் தெலுங்கானா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம் மாநில சட்டசபை தேர்தல்களுக்கான தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இம்மாநிலங்களில் நவம்பர் 7-ந் தேதி முதல் நவம்பர் 30-ந் தேதி வரை வாக்குப் பதிவு நடத்தப்படுகிறது. இந்த மாநிலங்களில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்த நிலையில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என அறிவித்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். ஆம் ஆத்மியின் இந்த தனி ஆவர்த்தனம் காங்கிரஸை ரொம்பவே அத்ருப்தி அடைய வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் தற்போது காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்கும் என்பது பெரும்பாலான கருத்து கணிப்புகளின் முடிவுகள்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக இடையேதான் போட்டி இருந்து வந்தது. பாஜகவின் கடந்த கால ஆட்சியின் செயல்பாடுகள் சத்தீஸ்கர் மக்களை ரொம்பவே கொந்தளிக்க வைத்தது.

இதனால் காங்கிரஸுக்கு வாய்ப்பு கொடுத்தனர் மக்கள். இதனை முதல்வர் பூபேஷ் பாகெல் சரியாகப் பயன்படுத்தி பாஜகவை தலைதூக்க விடாமல் செய்து வைத்துள்ளார்.

இப்போது ஆம் ஆத்மியும் சத்தீஸ்கரில் களமிறங்கினால் காங்கிரஸுக்கு நெருக்கடியைத் தரக் கூடும் என்கிற அச்சம் அக்கட்சியினருக்கு உள்ளது.

இதேபோல ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பாஜகவிடம் பறிகொடுக்கும் என்பது கருத்து கணிப்புகளின் முடிவுகள். காங்கிரஸ் அரசுக்கு எதிரான அதிருப்தி அலை வீசுவதாக கூறப்படும் நிலையில் ஆம் ஆத்மியும் களமிறங்குவது காங்கிரஸ் கட்சியை மேலும் பலவீனப்படுத்தும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!