பிரதமர் மோடியின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து என தகவல் : தொங்கும் பாலம் விபத்து… அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு!!
Author: Udayachandran RadhaKrishnan31 அக்டோபர் 2022, 10:18 காலை
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே ஒரு தொங்கு பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த பாலம் சுமார் 100 ஆண்டுகள் பழமையானது. சில மாதங்களுக்கு முன்பு அப்பாலம் மறுசீரமைக்கப்பட்டது.
அப்பணி முடிந்த நிலையில், 5 நாட்களுக்கு முன்பு மீண்டும் திறந்து வைக்கப்பட்டது. இந்தநிலையில், நேற்று இரவு ‘சத்’ பூஜைக்காக ஏராளமானோர் அந்த பாலத்தின் மீது குவிந்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் திரண்டிருந்தனர்.
அப்போது அவர்களின் எடையை தாங்க முடியாமல், பாலம் திடீரென அறுந்து விழுந்தது. இதையடுத்து, பாலத்தில் நின்று கொண்டிருந்த ஏராளமானோர் ஆற்றுக்குள் பொத பொதவென விழுந்தனர்.
தகவல் அறிந்து விரைந்த பேரிடர் மீட்புப்படை வீரர்களும், மாநில பேரிடர் மீட்புப்படையினரும் உடனடியாக விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது. 177 பேர் மீட்கபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில், மோர்பியில் நிகழ்ந்த விபத்து குறித்து, குஜராத் முதலமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் பிரதமர் மோடி பேசினார்.
மீட்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்திய பிரதமர் மோடி, நிலைமையை உண்ணிப்பாக கண்காணித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனிடையே, ஆமதாபாத்தில் இன்று நடைபெற இருந்த பிரதமர் மோடியின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. குஜராத் தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் 141க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததையடுத்து குஜராத்தில் இன்று நடைபெறவிருந்த நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விபத்தில் காணாமல் போனவர்களை ராணுவம், விமானப்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
0
0