வெள்ளக்காடாக மாறிய ஆந்திரா, தெலுங்கானா : ஒரே நாளில் மழைக்கு 10 பேர் பலி..!!!

Author: Udayachandran RadhaKrishnan
1 September 2024, 1:53 pm

ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் நேற்று காலை முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பல இடங்களில் ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஏரிகள் நிரம்பி எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக தெலங்கானாவில் மெஹபூபாபாத், நல்கொண்டா, வாரங்கல், ஆந்திராவில் என் டி ஆர், கிருஷ்ணா, குண்டூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தாழ்வான இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

பல கிராமங்கள் வெள்ளநீரால் துண்டிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்

குறிப்பாக விஜயவாடாவில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக அதிக அளவில் மழை பெய்து இருப்பதன் காரணமாக பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது.

இதற்கிடையே மேலும் இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற எதற்காகவும் வெளியே வர வேண்டாம் என அரசு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ளவர்களை மீட்பதற்காக தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு வீரர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திரா, தெலுங்கானாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக தென் மத்திய ரயில்வே 9 ரயில்களை வெவ்வேறு மார்க்கத்தில் திருப்பி விடப்பட்டுள்ளது .

6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஐந்து ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டம், கேசமுத்திரம் மண்டலம் தல்லபூசப்பள்ளி ரயில் நிலையம் அருகே மழை வெள்ளத்தால் ரயில்வே தண்டவாளம் அடித்துச் செல்லப்பட்டது.
இதனால் மச்சிலிப்பட்டினம் எக்ஸ்பிரஸ் மஹபூபாபாத்தில் நிறுத்தப்பட்டது,பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!