நேர்மைக்கு கிடைத்த பரிசு… ஊர் சுற்றி காட்டிய ஆட்டோ ஓட்டுநரை காதலித்த பெல்ஜியம் பெண் : திருமணத்தில் இணைந்த பந்தம்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 November 2022, 3:38 pm
Belgium Lady Marry Karnataka - Updatenews360
Quick Share

இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பெல்ஜியம் நாட்டு இளம்பெண், தன்னை அழைத்துச் சென்ற ஆட்டோ டிரைவர் மீது காதல் கொண்டு, அவரையே திருமணமும் முடித்து இருக்கிறார்.

கர்நாடகாவின் ஹம்பி பகுதியில் தான் இந்த சுவாரசிய சம்பவம் நடைபெற்று இருக்கிறது. இது குறித்த விவரம் வருமாறு:- கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம் ஹம்பி பகுதியை சேர்ந்தவர் அனந்தராஜ்.

ஆட்டோ டிரைவராக இருக்கும் அனந்தராஜ், சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் வழிகாட்டி கைட் ஆகவும் இருக்கிறார். ஹம்பிக்கு சுற்றுலா வரும் பயணிகளை தனது ஆட்டோவில் அழைத்து சென்று அந்த இடத்தின் தகவல்கள் குறித்து தெரிவித்து வந்தார். அந்த வகையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக பெல்ஜியம் நாட்டை சேர்ந்த கெமில் என்பவர் தனது குடும்பத்தினருடன் இந்தியாவுக்கு சுற்றுலா வருகை தந்திருந்தார்.

அப்போது கெமில் குடும்பத்தினரை ஆட்டோ டிரைவரான அனந்தராஜ் தான் சுற்றுலாவுக்காக தனது ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளார். இதில் அனந்தராஜ் கெமில் குடும்பத்தினரிடம் ஹம்பி பற்றிய தகவல்களை மிக சுவாரசியமாக அவர்களுக்கு புரியும் படி கூறி இருக்கிறார்.

இதனால் கெமில் குடும்பத்தினருக்கு அனந்தராஜை பிடித்துள்ளது. இதேபோல் கெமிலுக்கும் அனந்தராஜை பிடித்துள்ளது. இதையடுத்து ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசியுள்ளனர்.

செல்போன் நம்பரை வாங்கிக்கொண்டு இருவரும் அடிக்கடி பேசி வந்தனர். இந்த பேச்சு நாளடைவில் காதலாக மலர்ந்தது. ஒரு நாள் இரண்டு நாள் அல்ல.. கடந்த 4 ஆண்டுகளாக இவர்கள் காதலித்து வந்துள்ளனர்.

இதையடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்காக அனந்தராஜ் கெமிலின் குடும்பத்தினரிடம் பேசியிருக்கிறார். அவர்களும் அனந்தராஜ் – கெமில் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து இந்து முறைப்படி திருமணம் நடக்க இருவீட்டாரும் அனுமதி அளித்தனர். அதன்படி கடந்த 23-ஆம் தேதி அனந்தராஜ் கெமில் நிச்சயதார்த்தம் நடந்தது.

தொடர்ந்து 25 ஆம் தேதியான நேற்று இவர்களது திருமணம் இந்து முறைப்படி கோவிலில் நடந்தது. ஹம்பியில் உள்ள விருபாக்‌ஷபா கோவிலில் வைத்து கெமிலுக்கு அனந்தராஜ் தாலி கட்டினார்.

பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. பலரும் வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்த அனந்தராஜுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Views: - 678

0

0