திருப்பதியில் நடிகர் தனுஷ் படப்பிடிப்புக்கு பாஜக எதிர்ப்பு.. பக்தர்கள் மீது படக்குழு தாக்குதல் : போலீசார் குவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
30 January 2024, 7:59 pm

திருப்பதியில் நடிகர் தனுஷ் படப்பிடிப்புக்கு பாஜக எதிர்ப்பு.. பக்தர்கள் மீது படக்குழு தாக்குதல் : போலீசார் குவிப்பு!

பிரபல நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய தமிழ் படத்தில் படப்பிடிப்பு இன்று திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள சாலை மற்றும் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவில் முன்பகுதி ஆகியவற்றில் நடைபெற்றது.

திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள அலிபிரி பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பிற்காக அந்த பகுதியில் போக்குவரத்தை போலீசார் முழுமையாக தடுத்து நிறுத்தி வேறு வழியில் திருப்பி விட்டனர்.

இதனால் திருப்பதி மலைக்கு செல்ல வேண்டிய பக்தர்கள், மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ்கள், அப்போது காலை நேரம் ஆகையால் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

திருப்பதியில் உள்ள முக்கிய சாலையில் காலை நேரத்தில் சினிமா படப்பிடிப்பு நடத்த அளிக்கப்பட்ட அனுமதிக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

அதன் பின் அந்த படக்குழுவினர் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவில் முன் பகுதியில் படப்பிடிப்பை நடத்த முற்பட்டனர்.

இதனால் அங்கு சாமி கும்பிடுவதற்காக வந்திருந்த பக்தர்களை வேகவேகமாக படக்குழுவினருடன் வந்திருந்த பவுன்சர்கள் அப்புறப்படுத்தினர்.

இந்த காட்சிகளை தெலுங்கு தொலைக்காட்சி சேனல் ஒன்றின் ஒளிப்பதிவாளர் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்தார். அவரிடம் இருந்து செல்போனை பிடுங்க முயன்ற பட குழுவினர் அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

எனவே திருப்பதியில் படக்குழுவினர் தனுஷ் நடிக்கும் குறிப்பிட்ட திரைப்படத்தின் படப்பிடிப்பை நடத்த அளிக்கப்பட்ட அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் நடத்திய நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரியும் பாரதிய ஜனதா கட்சியின் ஆந்திர மாநில செய்தி தொடர்பாளர் பானு பிரகாஷ் ரெட்டி மற்றும் பத்திரிக்கையாளர் சங்கத்தினர் ஆகியோர் திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்தனர்.

புகாரை பெற்று கொண்ட காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.

இதையடுத்து படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக வந்த புகாரையடுத்து தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!