ஆபத்தான சூழலில் டெல்டா விவசாயம்… 80% நிரம்பியும் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடகா ; பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

Author: Babu Lakshmanan
4 August 2023, 12:54 pm

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய நீரைத் திறந்து விட கோரி கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:- இந்தியாவின் பிற பகுதிகளைப் போல் அல்லாமல் தமிழ்நாடு, குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகள், தென்மேற்கு பருவமழையின்போது மிகக் குறைவான மழைப்பொழிவைப் பெறுவதாகவும், குறுவை சாகுபடியும், சம்பா நெல் விதைப்பும், மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை, குறிப்பாக கர்நாடகாவிலிருந்து வரும் நீரை மட்டுமே சார்ந்துள்ளதாகவும், மாதாந்திர அட்டவணைப்படி, பிலிகுண்டுலுவில், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரின் பங்கை சுப்ரீம் கோர்ட்டு நிர்ணயித்துள்ளதாகவும், துரதிர்ஷ்டவசமாக, இந்த உத்தரவை கர்நாடகம் முழுமையாக மதிக்கவில்லை என்றும் தெரிவித்து உள்ளார்.

மேலும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்களையும் கடைபிடிக்கவில்லை. 2023-2024 ஆம் ஆண்டில் 2023 ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை கர்நாடகாவிலிருந்து பிலிகுண்டுலுவிற்கு 40.4 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர வேண்டிய நிலையில், 11.6 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே வந்துள்ளதாகவும், கர்நாடகாவில், 4 முக்கிய நீர்த்தேக்கங்களின் முழு கொள்ளளவான 114.6 டி.எம்.சி.-யில், 91 டி.எம்.சி அளவிற்கு மொத்த நீர் இருப்பு தற்போது உள்ள போதிலும், கர்நாடக அரசு 28.8 டி.எம்.சி. அளவிற்கு பற்றாக்குறையாக தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட்டுள்ளது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்து உள்ளார்.

காவிரி டெல்டாவின் உயிர்நாடியாக விளங்கும் மேட்டூர் அணையில், 2023 ஆகஸ்டு 2 ஆம் நாளன்று நிலவரப்படி, 26.6 டி.எம்.சி. அளவிற்கு மட்டுமே தண்ணீர் உள்ளதாகவும், இது குடிநீர் மற்றும் இதர அத்தியாவசிய தேவைகளுக்கு 15 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். குறுவை நெற்பயிர் முதிர்ச்சியடைந்து, அதிக மகசூல் பெற, இன்னும் 45 நாட்கள் தண்ணீர் தேவைப்படுகிறது. இத்தகைய ஆபத்தான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மத்திய ஜலசக்தித் துறை அமைச்சர் அவர்களிடம் கடந்த ஜூலை 5 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இப்பிரச்சினையை எடுத்துச் சென்று, சுப்ரீம் கோர்ட்டு நிர்ணயித்த விநியோக அட்டவணையைக் கடைப்பிடிக்க கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரைகளை வழங்கிடுமாறும், இதனை முறையாக கண்காணிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தினை அறிவுறுத்துமாறும், இருப்பினும், கர்நாடக அரசு இவற்றைக் கருத்தில் கொள்ளாமல் முழுமையாக நிரம்பிய கபினி அணையில் இருந்து மட்டுமே தண்ணீரைத் திறந்து விட்டதாகவும், கர்நாடகாவின் முக்கிய நீர்த்தேக்கங்கள் 80 விழுக்காடு அளவிற்கு நிரம்பியுள்ள சூழ்நிலையிலும் அவற்றிற்குத் தொடர்ந்து நல்ல நீர்வரத்து உள்ள சூழ்நிலையிலும், அந்த நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் ஏதும் திறக்கப்படவில்லை.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா, மாநிலத்தின் நெல் தேவையைப் பெருமளவு பூர்த்தி செய்வதாகவும். ஏற்கெனவே அரிசித் தட்டுப்பாட்டால், பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ள தற்போதைய சூழலில், காவிரி டெல்டாவில் தற்போது உள்ள குறுவை நெல் பயிரையும், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உடனடியாகத் தலையிட்டுக் காப்பாற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

அதோடு, சுப்ரீம் கோர்ட்டு நிர்ணயித்துள்ளபடி, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாகத் திறந்துவிடவும், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஏற்பட்ட பற்றாக்குறையைத் தீர்க்கவும் கர்நாடக அரசுக்கு பிரதமர் மோடி உரிய அறிவுரைகளை வழங்குவதோடு, இதனை உறுதி செய்வதற்குத் தேவையான அறிவுரைகளை ஒன்றிய ஜலசக்தி அமைச்சகத்திற்கும் வழங்கிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!