தலைவர் பதவியை விட்டுக்கொடுக்கிறாரா சோனியா…? 5 மாநில தேர்தல் தோல்வி…. ஜி23 காங்., தலைவர்கள் கொடுக்கும் புதிய நெருக்கடி..!!

Author: Babu Lakshmanan
11 March 2022, 1:38 pm
Quick Share

உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நிலையில், அக்கட்சியில் உள்ள அதிருப்தி தலைவர்களால் சோனியா காந்தி கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த உத்தரபிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த பஞ்சாப், அக்கட்சியின் கையை விட்டு நழுவியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி வெறும் 18 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

அதுமட்டுமில்லாமல், 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. 403 தொகுதிகளைக் கொண்ட மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் வெறும் 2 தொகுதிகளை மட்டுமே வென்றுள்ளது. அதேபோல, மணிப்பூரில் வெறும் 5 இடங்களிலும், உத்தரகாண்ட்டில் 19 தொகுதிகளிலும், கோவாவில் 11 இடங்களிலும் மட்டுமே காங்கிரஸ் பெற்றுள்ளது. இது அந்தக் கட்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

இதனிடையே, மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாகவும், தைரியம் மற்றும் புதிய ஆற்றலுடன் தொடர்ந்து பயணிப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர். மேலும், தேர்தல் முடிவுகளை சுயபரிசோதனை செய்து கொள்ள விரைவில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் கூட இருப்பதாகவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தோல்வியால் மேலும் அதிருப்தியடைந்த ஜி23 எனப்படும் கிளர்ச்சி காங்கிரஸின் தலைவர்கள் குழு, அவசர ஆலோசனை நடத்த அடுத்த 48 மணிநேரத்தில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Sonia Gandhi Letter - updatenews360

அதாவது, ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்த போது, தலைமை சரியில்லை எனக் கூறி சில தலைவர்கள் போர் கொடி தூக்கினர். கட்சியின் தலைமைக்கு எதிராக பல நேரங்களில் இவர்கள் வெளிப்படையாக கேள்வி எழுப்பி சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு அதிர்ச்சியை கொடுத்தனர். குறிப்பாக, கட்சியின் தலைவர் மற்றும் கட்சியின் நாடாளுமன்ற வாரியத்திற்கான தேர்தல்கள் உள்ளிட்ட பல அமைப்பு சீர்திருத்தங்களை அவர்கள் வலியுறுத்தி பலமுறை கடிதம் எழுதிருந்தனர்.

இந்தக் குழுவில், மூத்த தலைவர்களான குலாம் நபி ஆஷாத், கபில் சிபில், சசி தரூர், மணீஷ் திவாரி, ஆனந்த் சர்மா, பிஜே குரியன், ரேனுகா சவுத்ரி, மிலின்ட் தோரா, முகுல் வாஷ்னிக், ஜித்தின் பிரசாத், பூபேந்திர சிங் ஹுடா, ரஜிந்தர் கவுர் பாதல், எம். வீரப்ப மொய்லி, ப்ரித்திவிராஜ் சவுகான், அஜய் சிங், ராஜ் பாபர், அர்விந்த் சிங் லவ்லி, கவுல் சிங் தாகூர், குல்தீப் ஷர்மா, யோகானந்த் சாஷ்த்ரி, சந்தீப் தீக்ஷித், விவேக் தாகா உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர்.

இந்தக் குழு தற்போது கூடி கட்சியில் எடுக்க வேண்டிய சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, வலுவான தலைமையை தேர்வு செய்ய வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது. ஏற்கனவே, நாடாளுமன்ற தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை விட்டு விலகி விட்டார். சோனியா காந்தியும் உடல்நலக்குறைவால் அடிக்கடி பாதிக்கப்படுவதால், அவர் தற்போது இடைக்கால தலைவராக மட்டுமே செயல்பட்டு வருகிறார்.

Rahul_Sonia_UpdateNews360

தற்போது, தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட வேண்டும் என்ற நெருக்கடி வலுத்தால், கட்டாயம் ராகுல், சோனியாவுக்கு மாற்றாக வேறு ஒரு தலைவரைத் தேர்வு செய்வதுதான் ஒரே வழியாக இருக்கிறது. எனவே, சோனியா காந்தி குடும்பத்திடம் இருந்து கட்சியின் தலைவர் பதவி பறிபோகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

உட்கட்சி பூசல்களால்தான் அடுத்தடுத்து மாநிலங்களில் ஆட்சியை காங்கிரஸ் இழந்து வருகிறது. எனவே, தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்க சோனியா காந்தி ஆயத்தமாகி வரும் நிலையில், கட்சியின் மூத்த தலைவர்கள் அளித்துள்ள நெருக்கடி, காங்கிரசுக்கு பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது.

Views: - 496

0

0